ஆவினில் தீபாவளிக்காக இதுவரை ரூ.149 கோடிக்கு ஆர்டர் வந்துள்ளது- அமைச்சர் மனோ தங்கராஜ்
பாழான ஆவின் பொருட்களை யாரேனும் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டமானது நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “தீபாவளியையொட்டி, 115 கோடி ரூபாய்க்கு கடந்த ஆண்டு ஆன விற்பனை, இந்த ஆண்டு 149 கோடி ரூபாய் அளவுக்குரிய ஆர்டர்களாக கிடைத்துள்ளது. இதுவரை 32 கோடி ரூபாய்க்கு ஆவின் பொருட்கள் விற்பனை ஆகி உள்ளது. கடந்த காலங்களில் கொள்முதல் குறைந்தது உண்மைதான். தற்போது அது அதிகரித்திருக்கிறது. 2 லட்சம் கறவை மாடுகள் வாங்கும் திட்டத்தின் மூலம் நிச்சயம் பால் கொள்முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு 149 கோடி ரூபாய்க்கு ஆவின் பொருட்களுக்கான ஆர்டர்கள் கிடைத்துள்ளன.
விற்பனைக்கு வரும் பால் பாக்கெட்டுகளின் எடை குறைவு என சொல்வது தவறான குற்றசாட்டு. 14 லட்சத்து 86,000 பால் பாக்கெட்டுகள் சென்னையில் விற்பனை செய்யப்படும் நிலையில், திட்டமிட்டே சிலர் தவறான குற்றசாட்டுகளை சொல்லுகின்றனர். பிரதான கூட்டுறவு சங்கங்களை சேர்ந்தவர்களுக்கு வெகு விரைவில் ஊதிய உயர்வு அளிக்கப்படும். பாழான ஆவின் பொருட்களை யாரேனும் விற்பனை செய்தால், மொத்த விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பெட்ரோல்-டீசல் விலை மற்றும் உற்பத்தி பொருட்கள் விலை ஏற்றத்தால் ஆவின் பொருட்களின் விலை ஏற்றம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பால் கொள்முதல் நிலுவை தொகை என்பதே இல்லை. 10 நாட்களுக்கு ஒரு முறை நிலுவை தொகையை அளித்து வருகிறோம்” என்றார்.