“அதிமுக தற்போது முழ்கும் கப்பலாக உள்ளது”- மனோ தங்கராஜ்
சிங்கப்பூரை சேர்ந்த சிங்கெல்த் (Singhealth) மற்றும் க்ளோஸெல் சார்பில் குடும்ப மற்றும் மகளிர் நலத்தை மையமாக கொண்டு கேரிங் பார் யுவர் ஹெல்த் (Caringforyourhealth) என்ற சுகாதார விழிப்புணர்வு கலந்தாய்வு தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இது சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் சிங்கப்பூர் குடியரசின் தூதர் எட்கர் பாங் த்ஸீ சியாங் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோதங்கராஜ், “தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் பந்தம் நல்ல இணைப்பில் உள்ளது. குறிப்பாக திருச்சியில் அதிக அளவில் பிரசவ இறப்பு ஏற்படும் போது சிங்கப்பூரை சேர்ந்த மருத்துவ குழு அங்கு சென்று மருத்துவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதனை தவிர தமிழ்நாட்டில் பல்வேறு புதுமைகளை கொண்டு வர சிங்கப்பூர் உதவியாக உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் உணவு நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறிவிட்டது அதனால் உடல்பருமன், நீரிழிவு நோய் எல்லாம் ஏற்படுகிறது. மேலும் இயற்கை வளங்களை அழிக்க தொடங்கி விட்டனர் இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி சமூக வலைதளத்தால் எதிர்ப்பு மனநிலை அதிகரித்து விட்டது. இதனால் சிறு வயது முதலே மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. எனவே மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் அதற்கு இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தேவை.
எஸ்ஐஆர் பல மாநிலங்களில் திட்டமிடப்பட்டு தேர்தல் சதியாக நடத்தி வருகிறார்கள். இதனை தடுத்த நிறுத்த வேண்டும். அந்த பணிகள் நடந்துகொண்டு இருக்கிறது, இருப்பினும் இதனை சந்திக்கவேண்டிய நிலை உள்ளது. திமுக இதனை சந்திப்பதற்கு தயாராக இருக்கிறது, எந்த தாக்குதல் வந்தாலும் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறோம். பொதுமக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் உண்மையிலேயே மிகப்பெரிய சதி தான் எஸ்ஐஆர். மோடி செய்த தவறுகள் அனைத்தையும் ராகுல் காந்தி வெளிக்கொண்டு வருகிறார். பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும். இந்த எஸ்ஐஆரை அனைத்து கட்சிகளும் எதிர்த்து வருகிறது, ஆனால் அதிமுக இதனை பற்றி ஏதும் கூறவில்லை. அதிமுக தற்போது முழ்கும் கப்பலாக உள்ளது, ஒரு பக்கம் உட்கட்சி பிரச்சனை, ஒரு பக்கம் பாஜக அழுத்தம் என்று என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறது. எனவே அதிமுக மனசாட்சியுடனும் நேர்மையுடனும் எஸ்ஐஆர் வேண்டாம் என்று இருக்க வேண்டும். தமிழகத்தில் ஐந்து வருடத்தில் பால்வளத்துறை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து நல்ல முறையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்கு தேவையான அளவு கடன் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.


