ஊழலை பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்

 
mano

ஊழலுக்குப் பேர் போன பாஜகவுக்கு ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைப் பற்றிப் பேச எந்த தகுதியும் இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். 

தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன்  ஏப்ரல் 14ம் தேதி வெளியிடுவதாக அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி,  தமிழ் புத்தாண்டு தினமான நேற்று காலை 10.15 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் அண்ணாமலை திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். செய்தியாளர்கள் முன்னிலையில் திமுகவினரின் ஊழல் பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாசித்தார். அப்போது திமுக பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலையும் அண்ணாமலை வெளியிட்டார்.  

இந்த நிலையில், ஊழலை பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பட்டியலைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. பாஜகவுக்கு ஊழலைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை. பாஜகவுக்கு, தமிழ்நாட்டில் நடந்த மிகப்பெரிய நிதி நிறுவன மோசடியில் பங்கு உண்டு. கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் நடக்கும் ஆட்சியிலும், ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. ஊழலுக்குப் பேர் போன பாஜகவுக்கு ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைப் பற்றிப் பேச எந்த தகுதியும் இல்லை. இவ்வாறு கூறினார்.