மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் தக்காளி விலை குறைவு - அமைச்சர் தகவல்

 
mrk

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் தக்காளி விலை குறைவாக உள்ளது என தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருகிறது.  விளைச்சல் பாதிப்பு மற்றும் வரத்து குறைவே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.  தமிழகத்தை பொறுத்தவரை கிலோ ரூ.150 வரைஉ உச்சம் தொட்டு தற்போதும்  100 ரூபாயை கடந்தே விற்பனையாகி வருகிறது. இருப்பினும் நியாய விலைக்கடைகள் மற்றும் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில்  குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.  ஆனாலும் வெளி மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்தபாடில்லை. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மாற்றமின்றி கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் கிலோ ரூ. 120 முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 

tomato

இந்நிலையில், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் தக்காளி விலை குறைவாக உள்ளது என தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். காலநிலைக்கு ஏற்ப தக்காளி விலை உயர்கிறது, குறைகிறது. மற்ற மாநிலங்களை விட தக்காளி விலை தமிழகத்தில் பரவாயில்லை. விலையேற்றத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. ஆனால் தமிழக அரசு உழவர் சந்தை மூலமாகவும், கூட்டுறவு துறை மூலமாகவும் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்து வருகிறது. சில காலங்களில் அதிக அளவில் தக்காளி உற்பத்தி செய்து விலை கிடைக்காமல் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.