அண்ணா பல்கலை. தேர்வுக்கட்டண உயர்வு நிறுத்திவைப்பு- அமைச்சர் பொன்முடி

 
பல்கலை. பட்டமளிப்பு விழா: ஆளுநர் புகாருக்கு அமைச்சர் பொன்முடி மறுப்பு!

அண்ணா பல்கலை. தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

anna univ

அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, தன்னாட்சி கல்லூரிகளில் பட்டப்படிப்பு சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் கட்டணமும் ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டணம், இளநிலை பட்டங்களுக்கு ரூ.150ல் இருந்து ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் முதுநிலை பட்டங்களுக்கு ரூ.450ல் இருந்து ரூ670 ஆக உயர்கிறது என்றும் அண்ணா பல்கலை அறிவித்தது.

இந்த புதிய கட்டணம் எதிர்வரும் நவம்பர் - டிசம்பர் செமஸ்டர் தேர்வில் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “அண்ணா பல்கலையில் பொறியியல் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது. அடுத்த சிண்டிகேட்டில் தீர்மானம் நிறைவேற்றும் வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வுக்கட்டணம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது, கட்டக்கூடிய தேர்வு கட்டணமே இனி நடைமுறையில் இருக்கும். தேர்வுக்கட்டணத்தில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும். இந்தாண்டு மட்டுமல்ல அடுத்தாண்டும் தேர்வு கட்டணம் நிறுத்திவக்கப்படும்.

 அமைச்சர் பொன்முடி..


தேர்வு கட்டணத்தை உயர்த்துவது மாணவர்களை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தாண்டும், வரும் ஆண்டும், இனி வரக்கூடிய நாட்களிலும் தேர்வு கட்டணம் அதிகரிக்காது” என்றார்.