சகாயத்திற்கான பாதுகாப்பு நிச்சயம் வழங்கப்படும் - அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட கட்டியாவயல் அருகே உள்ள குமார் 1200 ஏக்கர் பரப்பளவை கொண்ட தமிழ்நாடு கண்மாயை தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மெகா அறக்கட்டளை இணைந்து தரைகளை உயர்த்தி குறுங்காடு உருவாக்கும் பணியை தொடங்கியுள்ளது. இந்தப் பணியை தமிழ்நாடு கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். மேலும் இதில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் துணை மேயர் லியாகத்அலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி, “கனிமவளத்துறை பொறுப்பேற்ற பிறகு நேற்றைய தினம் அலுவல் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒன்றிய அரசு மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்தான் கனிமவளம் எடுப்பதற்கான தரை கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனால்தான் கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்தது. ஏற்கனவே எம் சாண்ட் பி சாண்ட் விலை ஏற்றப்பட்ட நிலையில் தற்போது அது குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுமான பொருட்களை எந்த அளவுக்கு குறைப்பதற்கான வழிவகை இருக்கிறதோ அந்த அளவு குறைப்பதற்கு அரசு செய்யும். பொதுமக்களுக்கு பாதகமோ சங்கடமோ ஏற்படும் சூழ்நிலையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசு ஒருபோதும் ஏற்படுத்தாது. சகாயம் ஐஏஎஸ் தனது பாதுகாப்பு இல்லை என்று குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் அவரை காணொளி வாயிலாக கூட ஆஜராகி வாக்குமூலம் கொடுக்கலாம். அவருக்கு வேண்டிய பாதுகாப்பு என்ன கேட்கின்றாரோ அதை நிச்சயம் அரசு செய்யும். உண்மையைச் சொல்ல வருகின்றவர்களை பாதுகாத்து உண்மையை சொல்ல வைப்போமோ தவிர யாருக்கும் பாதுகாப்பு தராத அரசு இந்த அரசு இல்லை, அனைவரையும் அரவணைத்து பாதுகாக்கின்ற அரசுதான் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசு.
திராவிட மாடல் ஆட்சியின் பார்ட் டூ அடுத்து வரக்கூடிய 2026 ஆட்சி. 2021 தேர்தலில் மு.க.ஸ்டாலினுக்கு சட்டம் சரி இல்லை என்று கூறினார்கள். கட்டம் சரியில்லை என்று சொன்னவர்களுடைய கட்டத்தை சரி இல்லாமல் செய்தவர் தான் மு க ஸ்டாலின். அதேபோல் பார்ட் 2 எல்லாம் ஃபெயிலியர் என்று கூறுகிறார்கள். இதிலிருந்து பார்ட் 2 வரும் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். பார்ட் 2வை எப்படி வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும் திராவிட மாடல் ஆட்சியினுடைய இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என்று மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். மற்ற பார்ட் 2 ஃபெயிலியர் ஆக இருக்கலாம் ஆனால் இந்த பார்ட் இந்தியாவிலேயே இன்னும் அதிகமாக தமிழ்நாட்டை முன்னிலை இடத்திற்கு எடுத்துச் செல்லும். ஆட்சி மீது பொதுமக்களுக்கு அதிருப்தி கிடையாது. ஆனால் இன்றைக்கு சிலர் அதிருப்தி விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கள நிலவரத்தை பார்க்கும் பொழுது எந்த தாய்மாரிடம் கேட்டாலும் அவர்களுக்கான அதிருப்திக்கான எந்த ஒரு வாய்ப்பையும் நாங்கள் தரவில்லை. 7-05-2021க்கு பின்னும் முன்னும் என்று கணக்கெடுத்தீர்கள் என்றால் அத்தனை பேரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் எங்கள் கையில் பணப்புழக்கம் இருக்கிறது என்று சொல்லத்தக்க அளவிற்கு சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்ற அரசு தான் இந்த அரசு. இதைப்போல் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பெண்கள் கையில் உருவாக்குகின்ற அரசு எங்கும் உருவாகவில்லை. நாங்கள் தான் செய்கின்றோம்” என்றார்.


