“கோவில் பிரசாத கடைகளில் இது கட்டாயம் இருக்க வேண்டும்”- அமைச்சர் ரமேஷ் அதிரடி

 
ச்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களில் செயல்படும் பிரசாத கடைகளில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்கள் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும், அதை முறையாக கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்

Image


இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி - ஜம்புகேஸ்வரர் கோவிலில் இன்று ஆய்வு மேற்கொண்டார். கோவில்களில் உள்ள பிரசாத கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்குள்ள பிரசாதங்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் இருந்ததை குறித்து விசாரணை மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் , “இன்று நடத்தப்பட்ட ஆய்வில் பிரசாத கடைகளில் பிரசாதம் தயாரிப்பு தேவி மற்றும் காலாவதி தேதி இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இனி அவ்வாறு விற்பனை செய்யக்கூடாது, உரிய முறையில் தயாரிப்பு தேதியில் மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களில் உள்ள பிரசாத கடைகளில் இதை பின்பற்ற வேண்டும் எனவும் உரிய முறையில் அதிகாரிகள் அதனை கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளோம்.ஒப்பந்ததாரர்கள் அதை சரியான முறையில் பின்பற்றபடாவிட்டால் விளக்கம் கேட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவில்களில் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளோம். அதேபோல கோவில்களில் உள்ள கழிப்பறைகளை சுழற்சி முறையில் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அதனை முறையாக குறிப்பெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் திடீர் ஆய்வுகள் நடத்தப்படும். அப்படி நடத்தும் போது அங்குள்ள பிரச்சினைகளை கண்டறிந்து அதனை சரி செய்யும் வகையில் உரிய தீர்வு காணப்படும். திருவானைக்கா கோவிலில் பக்தர்கள் அமர்ந்து இருந்த இடத்தில் தூய்மை பணியாளர்கள் தண்ணீர் ஊற்றி அவர்களை விரட்டியதாக வெளியான வீடியோ குறித்து விளக்கம் கேட்டுள்ளோம். அதற்கான விளக்கம் வந்த பின்பு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வோம்” என தெரிவித்தார்.