“காமெடியில் செல்லூர் ராஜுவை பின்னுக்குத் தள்ளிவிட்டார் செங்கோட்டையன்” - அமைச்சர் சாமிநாதன்
விஜயை நிரந்தர முதல்வர் ஆக்குவேன் என செங்கோட்டையன் கூறியது 2025ம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை. காமெடியில் செல்லூர் ராஜுவை பின்னுக்கு தள்ளிவிட்டார் தவெக செங்கோட்டையன் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் தாட்கோ திட்டத்தின் கீழ் ரூ. 80.23 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் மற்றும் அறிவு சார் மையம் அமைக்கும் பணிகளை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார். பின் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021 - 2022ன் கீழ் ரூ. 9.62 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வாரசந்தை கடைகளையும் அமைச்சர் மு. பெ. சாமிநாதன் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், “காங்கேயத்தில் திங்கள் கிழமை தோறும் புகழ் பெற்ற சந்தை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் மழை, வெயில் சமயங்களில் பாதிக்கப்படாமல் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. 47 கடைகள், 294 வார கடைகள் இன்று பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்காக மாண்புமிகு தமிழக முதல்வருக்கு தொகுதி அமைச்சர் என்ற முறையில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கூடுதலாக 9 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. 36 கோடியில் அம்ரூத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நமது அரசு பொறுப்பேற்ற பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நகைச்சுவையாக பேசி வருகின்றனர்.முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை பின்னுக்குத் தள்ளி விட்டார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். விஜய் அவர்களை நிரந்தர முதல்வர் ஆக்குவேன் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இது 2025ம் ஆண்டின் சிறந்த நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளலாம்” என்றார்.


