சென்னையில் 21,000 ஊழியர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் - அமைச்சர் பேட்டி

 
sekar babu

சென்னை மாநகராட்சியில் 21 ஆயிரம் ஊழியர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். 

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்றுக்கு  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் மழை தொடர்பான கட்டணமில்லா புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

heavy rain

இந்த நிலையில், சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு செய்தார். சென்னை யானைகவுனி பகுதியில் அமைச்சர் சேகர் பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, தொடர் மழையால் ஒரு சில தாழ்வான இடங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் 21,000 ஊழியர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மழைநீர் தேங்கிய 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறோம். இவ்வாறு கூறினார்.