அண்ணாமலைக்கு எப்போதும் தின்பண்டங்கள் மீது தான் ஆசை- சேகர்பாபு கிண்டல்

 
அமைச்சர் சேகர்பாபு

சென்னை சூளையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். 

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அதன் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் இன்று முதல் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மூடப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “அரசின் அனைத்து துறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை பெறுவது தொடர்பான முகாம் துவங்கியுள்ளது. மிக்ஜாம் புயலால்  6 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொதை கிடைக்காதவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் இன்று முதல் தடை செய்யப்படுகிறது, கிளாம்பாக்கத்தில் இருந்து முழுமையாக செயல்படும். ஏற்கனவே இம்மாதம் 24 ஆம் தேதி பிறகு நாங்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து செயல்படுவோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உத்தரவாதம் கொடுத்தனர். ஆகையால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்றார் போல் அரசு செயல்பட முடியாது, மக்களுக்கு ஏற்றார் போல் தான் அரசு செயல்படும். மழை நீர் வடிகால் தொடர்பாக வெள்ளை அறிக்கை தயார்ப்படுத்தி வருகிறோம், இந்த அரசு வெளிப்படையானது.

Annamalai


ராமர் கோயில் திறப்பு விழா அன்று தமிழ்நாட்டில் 3 திருக்கோயில்களில் முழு நேர அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்து உள்ளோம். ராமர் கோயில் திறப்பின் போது தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்ட பாஜகவின் எண்ணம் முறியடிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலைக்கு உதாரணம் கூட சொல்லத் தெரியாது, எப்போதும் தின்பண்டங்கள் மீது தான் ஆசை. ஆகவே தான் திமுக இளைஞரணி மாநாடு நமத்துப்போன மிக்சர் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். மாநில தலைவராக பொறுப்பேற்கும் முன்பு அவர் கிளை கழகத்தில் ஒரு கொடி கம்பம், சுவரொட்டி கூட ஒட்டியது கிடையாது, பொது கூட்டம் நடத்தியது இல்லை, அங்கு பேசியது கிடையாது, ஆகவே திமுகவின் இளைஞர் அணி மாநாட்டை பற்றியெல்லாம் அவருக்கு என்ன தெரியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.