“முதல்வர் ராமதாஸை கண்ணிய குறைவாக எதுவும் பேசவில்லை... மன்னிப்பு கேட்கும் பழக்கம் இல்லை”- சேகர்பாபு
அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பில், அருள்மிகு ஐயப்பன் மலர் வழிபாடு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, 40 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலைக்கு சென்று வந்த குருசாமிகளுக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு உள்ளிட்டோர் பங்கேற்று கச்சேரியை ரசித்து வழிபாடு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு, “மாதம் தோறும் 5 நாட்கள், கார்த்திகை மாதம் 41 நாட்கள் விரதம் இருந்து இறுதி நாள் மண்டல பூஜை வரை விரதம் இருக்கும் ஐயப்பன் பக்தர்கள், தொடர்ந்து அரைமண்டலம் மகர ஜோதிக்காக விரதம் இருக்கும் பக்தர்களுக்கும் எல்லா வகைகளிலும் சிறப்பு சேர்க்கும் வகையில் திமுக ஆட்சிக்கு பின் மூன்றாவது ஆண்டாக மலர் பூஜை நடைபெற்றுள்ளது. 40 ஆண்டுகள் சபரிமலைக்கு சென்று வந்த பக்தர்களுக்கு ஐய்யப்பன் உருவம் பொறித்த வெள்ளி டாலரும், மரியாதை செலுத்தும் வகையில் அங்கவஸ்திரமும் போர்த்தப்பட்டது. சபரிமலைக்கு கடந்த ஆண்டு 20 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை அனுப்பு வைத்தோம். இந்த ஆண்டு 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டது.
பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு சுடுநீர் தேவைப்படுவதால் 2 ஆயிரம் சுடுநீர் வைக்கும் பாட்டில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு தகவல் கிடைக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அரசு இந்து சமய அறநிலையத் துறை தலைமையகத்தில் செயல்பட்டு வருகின்றது. கன்னியாகுமரி தேவஸ்தானத்திற்கு பணிபுரியும் இருவரை அங்கு பணியமர்த்தி மண்டல காலங்களில் தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு தேவை இருப்பின் அதை செய்து கொடுக்கவும் முயற்சி எடுக்கப்படுகிறது. ஆன்மீக சுற்றுலாக்கள் காசி யாத்திரை, ஆடி மாத ஆன்மீக சுற்றுலா, புரட்டாசி மாத பெருமாள் கோவில் சுற்றுலா, அறுபடை வீடுகள் என எதுவாக இருந்தாலும் 60 வயதுக்கு மேல் உள்ள பொருளாதார உதவி இல்லாதவர்களுக்கு பேருதவியாக இந்த ஆட்சியில் தான் ஆன்மீகம் என்று சொல்லுக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் எல்லா வகைகளிலும் உதவும் வகையில் திராவிட மாடல் ஆட்சி செயல்படுகிறது அதற்கு இந்த நிகழ்வும் ஒரு சாட்சி.
தமிழிசை அதிக கற்பனையுடன் இருப்பார்கள். நேற்று கூட தூத்துக்குடியில் யானை மிதித்து பாகன் இறந்த விபத்தில் கூட அந்த குடும்பத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று பேட்டி கொடுத்தார். அதே நேரத்தில் அவர்களுக்கு 10 லட்சம் நிவாரணம் அறிவித்தவர் முதலமைச்சர். கேட்காமலேயே தருகின்ற குணம் கேட்டால் தரும் மனம். இசைவாணி என்பதல்ல... தவறு யார் செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் முதல்வர் தவறு இருப்பின் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். இதில் மதங்களை சார்ந்து இந்த ஆட்சி அல்ல இது எல்லாருக்கும் எல்லாம் என்ற ஆட்சி. முதலமைச்சர் ராமதாஸ் தேவையில்லாமல் அறிக்கை விடுவார் என்று சொன்னதற்கு அன்புமணி ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்கிறார். நாடே தவறு என்று சொன்னதா? முதலமைச்சர் சொன்னதில் என்ன தவறு உள்ளது? தேவை இல்லாமல் பேசுகிறார் என்பது நடைமுறையில் இருக்கும் வார்த்தைதான். தமிழில் உபயோகப்படுத்தும் வார்த்தை தானே அது, unparliment வார்த்தை அல்ல. அது எப்படி தவறு என்று சொல்ல முடியும்.
ராமதாஸ் கடந்த காலங்களில் வெளியிட்ட அறிக்கைகளில் எடுத்துப் பாருங்கள் கொச்சையாக யாரையும் தரம் தாழ்ந்து பேசும் சூழல் இருப்பவர். எங்கள் முதல்வர் கண்ணியத்திற்கு பாதுகாவலராக இருப்பவர். கண்ணிய குறைவாக எதுவும் பேசவில்லை. ஆகவே அப்படி பேசும் சூழலும் அவருக்கு ஏற்படாது. மன்னிப்பு கேட்கும் பழக்கம் இல்லை, முதலமைச்சர் கூறிய வார்த்தையில் எள் அளவும் தவறு இல்லை” என்றார்.