“உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லையா? நிர்மலா சீதாராமன் தங்கம் தென்னரசுவுடன் நேருக்குநேர் விவாதத்துக்கு வரணும்”- சேகர்பாபு

 
sekarbabu sekarbabu

தமிழக மாணவர்களின் கல்விக்கு நீதி வழங்காத மத்திய நிதி அமைச்சருக்கு மனசாட்சி இருக்கிறதா? என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அம்பத்தூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அமுத கரங்கள் திட்டத்தின் கீழ் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மக்களுக்கு உணவுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வது அனைத்து மாநிலங்களுக்கும் தெரியும். பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் பாஜக ஆளாத மாநிலங்களுக்கும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தான் நிதி ஒதுக்கப்படுகிறது. மாதம் ஒருமுறை தமிழ்நாட்டிற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தாலும் திரும்பத் திரும்ப ஒரே பொய்யை தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவரது பொய்களை நம்ப மக்கள் தயாராக இல்லை. இன்றைய கல்விதான் நாளைய சமுதாயம் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட மாணவர்களின் கல்விக்கு நிதி ஒதுக்காமல் இருப்பதும் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி ஒதுக்குவோம் என கூறுவதும் உண்மையில் நிதி அமைச்சருக்கு மனசாட்சி இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. தமிழகத்தில் ஊழல் என்று ஒன்று இல்லாததால் தான் பொத்தாம் பொதுவாக ஊழல் என்று பேசுகிறார்கள். நிதி ஒதுக்கப்படும் பாரபட்சம் குறித்து தமிழக நிதி அமைச்சர் தெளிவாக சட்டமன்றத்தில் பேசி உள்ளார். வேண்டுமென்றால் மத்திய நிதி அமைச்சரை தமிழக நிதி அமைச்சருடன் வாதம் செய்ய சொல்லுங்கள்" என தெரிவித்தார்.