"திருச்செந்தூர் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை"- அமைச்சர் சேகர்பாபு
உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் இன்று காலை வெகுசிறப்பாக குடமுழுக்கு விழா நடைபெற்றது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் குடமுழுக்கு விழா என்பதால் பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாது, நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “திருச்செந்தூர் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். இன்னும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 இறுதிக்குள் 5 கோவில்களில் விரைவு தரிசனம், ஆன்லைன் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். நாங்கள் யாரையும் மேடை ஏறி திராவிடத்தை ஒழிப்போம் என்று கூறவில்லை. இன்று ஒலித்த மந்திரங்கள் அத்தனையும் ‘முருகனுக்கு அரோகரா’ என்று தான் ஒலித்தது. இதுதான் ஆன்மீகத்திற்கான உண்மையான மாநாடு . திருச்செந்தூர் குடமுழுக்கு பக்தர்கள் மாநாடு, பாஜகவினரின் மாநாடு அல்ல.
இனிமேல் எல்லா கோயில்களிலும் தமிழ் மொழியிலேயே குடமுழுக்கு மந்திரம் முழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வயலூர் முருகன் கோயிலில் அனைத்து ஜாதிகளும் அர்ச்சகாரர்களாம் திட்டத்தின் கீழ் அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திராவிட மாடல் அரசு, பெரியார், அண்ணா, கலைஞர் கனவுகளை நிறைவேற்றிவருகிறது. முருகருக்கு பெருமை சேர்த்த ஆட்சி திமுக. திமுக ஆட்சியில்தான் மருதமலை, வடபழனி கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றது. ரூ.400 கோடி மதிப்பில் திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அறுபடை வீடுகளில் 860 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடந்துள்ளது.” என்றார்.


