“டிசம்பர் மாதம் வள்ளலார் மாநாடு... வள்ளலார் ஆன்மா துணை நிற்கும்”- சேகர்பாபு
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபெறும் வள்ளலார் மாநாடு டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற உள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 203வது அவதார தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறிய வள்ளலார் கடலூர் மாவட்டம், மருதூர் கிராமத்தில் 1823-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி பிறந்தார். அவர் சுத்த சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை தொடங்கி அதன் கொள்கைகளைப் பரப்பி வந்தார். மேலும் பசியால் வாடுவோர் உணவருந்திச் செல்வதற்காக வடலூரில் சத்திய ஞான சபையில் தரும சாலையையும் தொடங்கினார். தரும சாலையில் அணையா அடுப்பு மூலம் உணவு தயாரிக்கப்பட்டு ஏழை, எளிய ஆதரவற்றோருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
வள்ளலார் பிறந்த 203-ஆவது அவதார தின விழா(வருவிக்கவுற்ற நாள்) வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது. இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு சத்திய தரும சாலையில் கொடி பாடல் பாடியபடி சன்மார்க்க கொடியேற்ற பட்டது. இதனைத் தொடர்ந்து தர்மசாலையில் அன்னதானம் வழங்கினர். அதேபோல, வள்ளலார் அவதரித்த மருதூர் கிராமத்தில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் வள்ளலார் சர்வதேச மையம் சைட் B யில் சித்த மருத்துவமனை, முதியோர் இல்லம், தங்கும் விடுதி உள்ளிட்டவைகள் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் வரைபடம், கட்டிடத்தை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, வள்ளலாருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், வருகின்ற நவம்பர் டிசம்பர் மாதத்தில் 2000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் சன்மார்க்க மாநாடு நடைபெற உள்ளதாகவும் வள்ளலாரின் நெறிகளை பாதுகாக்கும் அரசாக திமுக உள்ளது என தெரிவித்தார். பெருவெளி தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில்,பெருவெளிக்கும் சர்வதேச மையத்திற்கும் எவ்வித இடர்பாடும் கிடையாது என்பதற்காகவே ஒரு பகுதிக்கு நீதிமன்றம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது. ஆக்கிரமிப்பை கணக்கிட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். நிச்சயம் நீதி வெல்லும், சர்வதேச வள்ளலார் மையம் திறந்த மனதோடு எந்தவொரு காழ்ப்புணர்ச்சி இல்லாமலும் அவர் பெருமைக்கு பெருமை சேர்க்கும் வகையில் வள்ளலார் ஆன்மா துணை நிற்கும் என தெரிவித்தார்.


