முதல்வர் கோவையில் சாலை அமைப்பதற்கு ரூ.200 கோடி வழங்கியுள்ளார்: செந்தில்பாலாஜி

 
செந்தில் பாலாஜி

மின்சார உபகரணங்கள் கொள்முதல் ஆன்லைன் டெண்டர் மூலம் மட்டுமே நடைபெறுகிறது, இதில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு  திட்டப்பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள சர்வதேச ஹாக்கி மைதானம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியர்,  மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “தமிழகத்தில்  விளையாட்டு துறையை மேம்படுத்தி,  இந்தியவின்  விளையாட்டு தலைநகராக தமிழகம் அமையும் வகையில் துணை முதல்வர் செயல்பட்டு  வருகிறார். அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட ஹாக்கி வீரர்களின் கோரிக்கையை ஏற்று  கோவையில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் உலக தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பணிகள் நிறைவடைந்து செயல்பாட்டிற்கு வர உள்ளது. மேலும் ரூ.935 கோடி மதிப்பீட்டில்  பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் மாநகராட்சி பகுதி நடைபெற்று வருகிறது. அதன் முன்னேற்றம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்கிறோம். புதிய பணிகளும் கோவையில் நடைபெற்று வருகிறது.  

கோவையின் வளர்ச்சிக்கு முதல்வர் முக்கியத்துவம் அளித்து வருகிறார். சாலை அமைப்பதற்கு ரூ.200 கோடி சிறப்பு விதியை வழங்கி உள்ளார். சாலை அமைக்கும் இடங்களில் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் விரைந்து முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.   மாநகராட்சி பகுதிக்குள் விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டும் என விளையாட்டு வீரர்களின் கோரிக்கை உள்ளது அதன் அடிப்படையில்தான் சர்வதேச மைதானமும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படுகிறது.  கடந்த 5 வருடத்துக்கு முன்பு சாலை அமைத்து இருந்தால் இப்போது சாலை போட தேவை இருந்திருக்கிறது. வார்டு வாரியாக கணக்கெடுக்கப்பட்டு சாலை பணிகள் தொடங்கியுள்ளது. குனியமுத்தூர் பகுதியில் சாலை பணிகளை விரைந்து முடித்து விடுவோம் அதற்கான நிதி வந்துள்ளது. மின்சாரம் துறை சார்பில் கொள்முதல் செய்யப்படக்கூடிய அனைத்து உபகரணங்களும் முறையாக ஆன்லைன் வாயிலாக டெண்டர் விடப்பட்டு வாங்கப்படுகிறது. அதற்கு என குழு கமிட்டி உள்ளது, அவர்கள் விலைப்பட்டியல் நிர்ணயித்து பின்பு தான் உத்தரவு வழங்கப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட முறைகள் தான்  பின்பற்றப்பட்டது. இதில் யாருடைய தலையிடும் இருக்காது. உயர் அதிகாரிகள் உள்ள கமிட்டியில் எந்த தவறும் நடக்காது” என்றார்.