11-ல் ஒருவர்தான் அண்ணாமலை.. அவரை மட்டும் பெரிதுப்படுத்துவது ஏன்?- செந்தில் பாலாஜி
முதல்வர் - அதானி சந்திப்பு நடக்கவில்லை என முழுமையான அறிக்கை விடுத்தும் அதை முழுமையாக படித்து புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாத அறிவுத்திறனற்றவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “கரூர் மாவட்டத்திற்கு புதிய வேளாண் கல்லூரி மற்றும் ரூபாய் 3000 கோடியில் பல்வேறு திட்ட திட்டங்களை முதல்வர் கொடுத்துள்ளார். இதேபோன்று மேலும் 200 ஏக்கரில் சிப்காட், தொழில் பூங்கா அமைய உள்ளது. கோடங்கிபட்டி உயர்மட்ட பாலம் விரைவில் வர உள்ளது. மின்சாரம் கொள்முதல் விசாரணை தொடர்பாக ஏற்கனவே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளோம். ஆனால் அந்த அறிக்கையை படித்த பின்னும் அதை புரிந்து கொள்ளாமல் ஒருவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவர் பலமுறை அந்த அறிக்கையை படித்தும் அவருக்கு புரியவில்லை. தெரிஞ்சவங்க கிட்ட கேட்டும் புரிந்து கொள்ள பக்குவமும் இல்லை. அந்த அளவுக்கு அறிவுத்திறனும் இல்லை.
நான் ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்கிறேன், அந்த வரிகளில் உள்ள ஜாமீன் அமைச்சர் என சொல்லி இருக்கிறார். பிஜேபியில் எத்தனை பேர் ஜாமினில் வெளி வந்திருக்கிறார்கள். எத்தனை பேர் அமைச்சராக இருக்கிறார்கள். அவர்கள் சொல்லக்கூடிய குற்றச்சாட்டு என்பது 7 ரூபாய் ஒரு காசு என்பது அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிதி என்பது உச்ச நீதிமன்ற வரை சென்று வழக்கு நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் நாங்கள் தடையானை கேட்டோம். ஆனால் உச்ச நீதிமன்றம் தடையானை வழங்கவில்லை. அதனால் அந்த நிதி விடுவிக்கப்பட்டது. ஏதோ நாங்கள் ஒப்பந்தம் போட போட்டது போல எங்கள் அரசு ஒப்பந்தம் போட்டது போல ஒரு தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்க முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சி ஒருபோதும் எடுபடாது. ஒரு கருத்தை சொல்லும் பொழுது நாங்கள் மாற்று கருத்தை முன்வைக்கிறோம். இந்த மூன்று ஆண்டுகளில் அதானி குடும்பத்தோடு எந்த தொடர்பும் தொழில் ரீதியாக எந்த தொடர்பும் வைக்கவில்லை என தெளிவாக கூறியிருக்கிறோம்.

ஆண்டு தோறும் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் படிப்பிற்காக வெளிநாடு செல்கின்றனர். செய்தித்தாள்களும், ஊடகங்களும் அது குறித்து பேசுவதில்லை. ஆனால் அண்ணாமலை என்ற ஒரு நபரைப் பற்றி மட்டும் திரும்பத் திரும்ப செய்தி வெளியிடுகின்றனர். ஒன்றிய அரசு தேர்வு செய்து அனுப்பிய நபர்களில் 11-ல் அண்ணாமலையும் ஒன்று” என்றார்.


