தொண்டர் அணிவித்த சால்வையை ஏற்க மறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி!

 
senthil balaji

கரூர் நகராட்சியில் சிறப்புத் தூய்மைப் பணியை தொடக்கி வைத்த போது அமைச்சர் செந்தில் பாலாஜி சால்வையை ஏற்க மறுத்தார்.

தூய்மை கரூர் திட்டத்தின் கீழ் கரூர் நகராட்சி பகுதியில் திருக்காம்புலியூர் மந்தையில் சிறப்பு தூய்மை பணி தொடக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். திட்டத்தை தொடக்கி வைத்த பிறகு தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் நகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் மொத்தமாக 70 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் மூலம் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. குப்பைகளற்ற தூய்மை நகராட்சியாக கரூர் நகராட்சி மாற்றப்படும். கரூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

senthil balaji

அச்சமயம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த திமுக தொண்டர் ஒருவர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சால்வை அணிவிக்க முயன்றார். அதை ஏற்க மறுத்த செந்தில் பாலாஜி, சால்வையை அவரிடமே திருப்பி வழங்கினார். கொரோனா பாதிப்பின் காரணமாக நிகழ்ச்சிகளில் யாரும் சால்வை அணிவிக்க வேண்டாம் என திமுக தரப்பில் பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அந்தத் தொண்டர் சால்வை அணிவிக்க முயன்றதால் செந்தில் பாலாஜி அதை ஏற்க மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.