மின் கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்

 
senthil balaji

மின்சார கட்டணத்தை மாற்றியமைக்காவிட்டால் கடன் வழங்கப்படாது என்ற அழுத்தம் காரணமாகவே, கட்டணம் உயர்த்தப்பட்டது.

தமிழகத்தில் மின்வெட்டு இல்லை; இனியும் இருக்காது': அமைச்சர் செந்தில் பாலாஜி-  Dinamani

மத்திய அரசு மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அழுத்தத்தால் தான் தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 26 ஆயிரம் கோடி மின்சார வாரியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் எதற்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரியத்தில் ஏற்பட்ட இழப்பு தொகையான 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கவில்லை என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் முதலமைச்சர் இழப்பீடு தொகையை முழுமையாக வழங்கியதாக குறிப்பிட்டார்.

மேலும், மத்திய அரசும் ,மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியதாக கூறிய அவர், மின்சார கட்டணத்தை மாற்றி அமைக்கவில்லை என்றால் கடன் அளிக்க மாட்டோம் என தெரிவித்ததாகவும், தமிழ்நாடு அரசு சார்பில் நடவடிக்கை எடுக்காவிட்டால், மின்சார ஒழுங்குமுறை ஆணையமே உத்தரவு பிறப்பிக்கும் என அழுத்தம் அளித்ததால் மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும், மத்திய அரசு மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அழுத்தத்தால் தான் தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 84 சதவீதம் அளவில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறிய அவர், தற்போது ஒரு கோடி மக்களுக்கு 0 சதவீதம் என்ற நிலையிலேயே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.