டிக்கெட் வித்தியாச கட்டணம் - திரும்ப வழங்க அமைச்சர் உத்தரவு

 
sivasankar

கோயம்பேட்டில் இருந்து முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து பயணம் செய்யும் போது வித்தியாச கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன் தினம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 393.74 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப் பெரிய பேருந்து முனையங்களுள் ஒன்றான "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை” திறந்து வைத்தார். மேலும், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் கட்டப்பட்டது. 

kilambakkam

இந்த நிலையில், கோயம்பேட்டில் இருந்து முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து பயணம் செய்யும் போது வித்தியாச கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். அரசு விரைவு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தவர்களுக்கு வித்தியாச கட்டணத்தை திரும்ப வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  பயணம் தொடங்கும் போது நடத்துனர் மூலம் வித்தியாச கட்டணத்தை திருப்பி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில நடைமுறை சிக்கல்களை தவிர்ப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டிற்கு பயணம் செய்வதற்காக பெறப்பட்ட கட்டணத்தில் தற்போது பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.