கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டிற்கு 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கம்: சிவசங்கர்

 
சிவசங்கர்

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம் மார்ச் மாத இறுதிக்குள், கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மாதம் பயன்பாட்டிற்கு வந்தது. இந்தநிலையில் இன்று முதல் செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் வழியாக செல்லக்கூடிய அனைத்து தென் மாவட்ட பேருந்துகளும், கிளாம்பாக்கம் பகுதியில் இருந்து இயங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு 20 சதவீத பேருந்துகள், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தநிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். முழுமையாக பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்ததை தொடர்ந்து எந்த மாதிரியான சிக்கல்கள் இருக்கிறது, என்பது குறித்தும் அதிகாரிகளுக்கு கேட்டு அறிந்து அதற்கான தீர்வுகளையும் விளக்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காலை 6 00 மணியிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுவது துவங்கியுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட  பேருந்துகளில் 80 சதவீத பேருந்துகள், கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது. மீதமுள்ள 20% பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது. வடசென்னை பகுதியை சேர்ந்த திருவெற்றியூர், ஆர். கே. நகர், திரு.வி.க நகர், துறைமுகம் ஆகியோர் மாதாவரம் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி தென் மாவட்டங்களுக்கு செல்லலாம். வடசென்னையில் இருந்து கிளாம்பாக்கம் பகுதிக்கு வருவது கடினமாக உள்ளது என அவர்களுடைய கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Image

மாதாவரம் பேருந்து நிலையத்திலிருந்து 160 நடைகள் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மொத்தம் 710 நடைகள் இயக்கப்படுகிறது. திருச்சிக்கு 118 நடைகளும் சேலத்திற்கு 66 நடைகளும் விருதாச்சலத்திற்கு 30 நடைகளும், கள்ளக்குறிச்சிக்கு 50 நடைகளும், விழுப்புரத்திற்கு 59 நடைகளும், கும்பகோணம் 52 நடைகளும் , சிதம்பரத்திற்கு 18 நடைகள், நெய்வேலி 44 நடைகள் , புதுச்சேரி வழியாக கடலூருக்கு 32 நடைகள், திண்டிவனம் வழியாக புதுச்சேரி செல்ல 35 நடைகள், செஞ்சி வழியாக திருவண்ணாமலை செல்ல 135 நடைகள் , போளூர் 30 நடைகள், வந்தவாசி 46 நடைகள் இயக்கப்பட உள்ளது. வடசென்னை பகுதியை சேர்ந்தவர்கள் மாதவரம் பேருந்து நிலையத்தையும், தென் சென்னை பகுதியை சேர்ந்தவர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும் பயன்படுத்த கேட்டுக்கொள்கின்றேன். கிளாம்பாக்கத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 135 நடை மேடைகள் ஒடுக்கப்பட்டுள்ளது. 110 பார்க்கிங்கில் நிறுத்துவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 77 நடைமேடைகளில் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் 250 பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி இருந்தபோது சாலை, அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று எந்தெந்த இடத்தில் எல்லாம் நெருக்கடிகள் ஏற்படுகிறதோ ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.  பேருந்து நிலையத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது அது வெளிப்படையாக தெரிவிக்கப்படுகிறது. மக்களின் தேவைக்கு அடிப்படையில் வசதிகள் சீர் செய்யப்படும். ஆம்னி பேருந்து ஊழியர்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் என்னென்ன வசதிகள் தேவையோ அவை உடனடியாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். முதலில் பாரி முனையில் இருந்து பேருந்து நிலையம் செயல்பட்ட பொழுது அதனை சுற்றி இருந்தவர்களுக்கு அது வசதியாக இருந்தது. கோயம்பேடு பகுதியில் இருந்து இயக்கிய பொழுது, அதனை சுற்றி இருந்தவர்களுக்கு வசதியாக இருந்தது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தவுடன், இங்கு இருப்பவர்களுக்கு வசதியாக இருக்கும். வடசென்னை மக்களுக்கும் இதே போன்ற வசதி கிடைக்க வேண்டும் என்று தான் மாதவரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. 

ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்காக முடிச்சூர் பகுதியில் கட்டி வரும் புதிய பேருந்து நிறுத்தம் இடம் மார்ச் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும். அங்கு செல்லும்பொழுது ஆம்னி ஊழியர்களுக்கு இன்னும் வசதியாக இருக்கும், மேலும் பேருந்து நிலையத்தில் மலிவு விலை உணவகம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டிற்கு 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்பட்டுவருகிறது” என்றார்.