“ஓட்டை உடைசல் பேருந்துகளை மாற்ற தான் முதல்வர் நிதி ஒதுக்கி உள்ளார்”- சிவசங்கர்

 
sivasankar

கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் விரைவாக அமைக்க ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் பேசியுள்ளார் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


மதுரை எம்.ஜீ.ஆர் பேருந்து நிலையத்தில் மதுரையில் இருந்து கோவை, நாகர்கோவில், மூணார், இராமேஸ்வரம், திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு புதிய பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது, இந்த புதிய பேருந்து சேவைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். மேலும் விபத்து இல்லாமல் சிறந்த முறையில் பணிபுரிந்த ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வெள்ளி நாணயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், “ஓட்டை உடைசல் பேருந்துகளை மாற்ற தான் முதல்வர் நிதி ஒதுக்கி உள்ளார். அதை மாற்றுவதற்குதான் புதிய பேருந்துகள் வாங்கப்படுகின்றன, 7,200 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு திட்டமிட்டு முதல் கட்டமாக 1000 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தமிழகத்தில் ஒரு வாரத்திற்குள்ளாக 300 புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 12 முதல் 15 ஆண்டுகள் வரை இயக்கப்பட்ட பேருந்துகள் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் இயக்கப்படும். 1,000 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தாலும் புதிய பேருந்துகள் வாங்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைக்கின்றன. கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் விரைவாக அமைக்க ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் பேசியுள்ளார்.

கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைப்பதற்கான நிதியை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தேவையான நேரத்திற்கு பேருந்து சேவை வழங்கிட வாட்ஸ் ஆப் குழுக்கள் அமைத்து பள்ளிக்கல்வித்துறையோடு போக்குவரத்துத்துறை இணைந்து செயல்படுகிறது, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சோதனை அடிப்படையில் 8 எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் மெல்ல மெல்ல எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும்” என்றார்.