போக்குவரத்துதுறை தனியார் மயமாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை- அமைச்சர் சிவசங்கர்

 
சிவசங்கர்

சீமானுக்கு ஈழ பிரச்சனையும் இலங்கை பிரச்சனையும் மட்டும் தான் தெரியும். எது சொன்னாலும் முழுவதும் தெரிந்து கொண்டு சொல்வது சீமானுக்கு நல்லது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2015ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் சன்னாசிப்பேட்டை பகுதியில் நடைபெற்ற முற்றுகையிடும் போராட்டத்தில் அப்போதைய குன்னம் தொகுதி எம்எல்ஏவும் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் கலந்து கொண்ட போது பிரச்சனை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. இதில் 9 போலீசார் காயமடைந்தனர். இது குறித்து கடலூர் மாவட்டம் ஆவினங்குடி போலீசார் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், உட்பட 8 பிரிவுகளின் கீழ் 37 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜவகர், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், “போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கல் என்பது முற்றிலும் கிடையாது. ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தனியாருக்கு டெண்டர் விடுவதாக வந்த செய்தி முற்றிலும் வதந்தி. தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் 7,300 புதிய பேருந்துகள் வாங்கி உள்ள நிலையில், தற்போது ஆயிரம் பேருந்துகள் வாங்கி உள்ளோம். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இடைப்பட்ட காலத்திற்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிய பின்பு அவர்கள் நீக்கப்படுவார்கள். அரசை குறை கூறவும் அரசியல் நோக்கத்திற்காகவும் சர்ச்சை எழுகிறது. போக்குவரத்து தனியார் மயமாக்கல் என ஒரு மாதத்திற்கு முன்பே எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அறிக்கை விடுத்தனர். தற்பொழுது ஒரு மாதம் தூங்கி எழுந்து சீமான் அதே கருத்தை தெரிவிக்கிறார். சீமானுக்கு இலங்கை பிரச்சனையும் ஈழத்தமிழர் பிரச்சனை மட்டும்தான் தெரியும். அரசியல் காரணத்திற்காக இது போன்று கூறி வருகின்றனர். எது சொன்னாலும் அதனை தெரிந்து கொள்வது சீமானுக்கு நல்லது” என்றார்.