தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தலைகாட்ட தொடங்கிவிட்டது... உஷார் மக்களே!

 
minister subramaniam

தமிழகத்தில் பருவமழை காலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அதாவது பருவமழை தீவிரமடையும் போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு இரட்டிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதன் படி, அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை டெங்கு பாதிப்பு இரட்டிப்பாக அதிகரிக்க வாய்பிருப்பதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார். எனவே சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அப்டேட் போன்ற கொசு மருந்து தெளித்தல், லார்வா நிலையிலேயே கொசு புழுக்களை அழித்தல், புழுக்கள் வளர்வதை தடுத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. 

dengue

அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் மட்டும் 3,500 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 2,930 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வார்டை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவமழை பெய்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் தலைகாட்ட தொடங்கிவிட்டது. மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக அரசு நிறுத்திவைத்திருந்த நிலையில் 1.26 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.