மழை நின்றவுடன் 2 மணி நேரத்துக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும்: தங்கம் தென்னரசு

 
தங்க தென்னரசு செய்தியாளர் சந்திப்பு தங்க தென்னரசு செய்தியாளர் சந்திப்பு

சென்னையில் மின்சாரம் தடைபட்ட இடங்களில் மழை நின்றவுடன் 2 மணிநேரத்தில் மின் விநியோகம் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “சென்னையில் மின்சாரம் தடைபட்ட இடங்களில் மழை நின்றவுடன் 2 மணிநேரத்தில் மின் விநியோகம் வழங்கப்படும். பாதுகாப்பு கருதியே முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நிறுத்தப்படும். மின்சாரம் வழங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை. மழை நின்ற பிறகு படிப்படியாக மின்சாரம் கொடுக்கப்பட்டவுடன் உடனடியாக வீடுகளில் இருக்கக்கூடிய மின் மோட்டார்கள் பயன்படுத்தி வீட்டுக்கு தேவையான தண்ணீரை நிரப்பிக்கொள்ள வேண்டும். அலைபேசிக்கு தேவையான சார்ஜரை பொதுமக்கள் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பிரிட்ஜ் போன்றவற்றை இயக்கி தேவையான பொருட்களை பதப்படுத்தி வைத்துக் கொள்ளவும். மின் நுகர்வு காலையில் 100 மெகா வாட்டாக இருந்தது தற்போது 340 மெகாவாட்டாக இருக்கிறது.

எந்த எந்த இடத்தில் எல்லாம் பிரச்சனைகள் இல்லையோ, அங்கு மின்சாரம் படிப்படியாக வழங்கப்பட்டு நுகர்வு கூடி கொண்டே வருகிறது. பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதியே தற்காலிகமாக மின்சார சேவை நிறுத்தப்பட்டது. மின் வாரிய தலைமை அலுவலகம் 24 மணி நேரமும் போர்க்கால அடிப்படையில் இயங்கும். சென்னையில் மின் பாதிப்புகளை சரிசெய்ய, மற்ற மாவட்டங்களில் இருந்து மின் துறை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன” என்றார்.