காங்கிரசின் மிசாவும், பாஜகவின் வருமான வரித்துறை சோதனையும் ஒன்றுதான் - உதயநிதி பரபரப்பு பேட்டி!

 
Udhayanidhi

காங்கிரஸ் கொண்டு வந்த மிசாவுக்கும், தற்போதைய பா.ஜ.க. அரசு நடத்தும் வருமான வரித்துறை சோதனைக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

திருச்சி தூய வளனார் கல்லூரி மைதானத்தில் எங்கள் முதல்வர், எங்கள் பெருமை என்ற தலைப்பில் நடைபெற்று வரும் தமிழக முதல்வரின் வரலாற்று புகைப்பட கண் காட்சி இன்று நிறைவு பெறுகிறது. இதனையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்காட்சியை பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: அமைச்சர் நேரு கடைசி நாளில் நீங்கள் வந்து பார்வையிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று இன்று பார்வையிட வந்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒரு அனுபவம் ஏற்படுகிறது. இது தலைவரின் 50 ஆண்டு கால உழைப்பு. முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் உழைப்பு, உழைப்பு என பாராட்டு பெற்றவர் நமது தலைவர். அந்த உழைப்பிற்கு எடுத்துக்காட்டாக சான்றாக இந்த கண்காட்சி விளங்குகிறது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள் ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது.  

தொடர்ந்து பேசிய அவர், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், எந்த சவாலையும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம். காங்கிரஸ் கொண்டு வந்த மிசாவுக்கும், தற்போதைய பா.ஜ.க. அரசு நடத்தும் வருமான வரித்துறை சோதனைக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் 31 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அடுத்த வருடத்திற்குள் பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு கூறினார்.