மருத்துவருக்கு கத்திக்குத்து- எதிர்காலங்களில் இதுபோல் நடக்காமல் இருக்க நடவடிக்கை: உதயநிதி ஸ்டாலின்

 
ந்

கலைஞர் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தில் அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோயியல் துறையில் பணிபுரிந்து வருபவர் மருத்துவர் பாலாஜி. இன்று வழக்கம் போல் பணிக்கு வந்த அவரை சந்திப்பதற்காக வந்த ஒருவர் சரமாரியாக கத்தியால் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.  முதல் தளத்தில் பணி மருத்துவரின் அறையில் நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து, மருத்துவரின் கூச்சல் சத்தத்தை கேட்டு உதவியாளர் அறையை திறக்க முற்பட்ட போது அறை உள்புறம் தாழ்ப்பாளிடப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் ரத்தக்கரை படிந்த கத்தியுடன் வெளியே வந்த நபரை மருத்துவமனை ஊழியர்கள் பிடித்து சரமாரி அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர் பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது. கடந்த 6 மாதமாக அவரது தாய் பிரேமாவிற்கு கலைஞர் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு  சிகிச்சை எடுத்துவந்ததும் தெரியவந்தது. 

இந்நிலையில், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவசர சிகிச்சை பிரிவிற்கு சென்று பார்வையிட்டு மருத்துவர் பாலாஜிக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி, “தற்போது மருத்துவர் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் 2-3 மணி நேரத்தில் சுயநினைவு திரும்பிவிடும். மருத்துவர் பாலாஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த செயலில் ஈடுபட்ட எந்த நபர் மீது கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவர்கள் மீது அக்கறை கொண்டது இந்த அரசு. கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.  மருத்துவர் பாலாஜியின் குடும்பத்தினர் வந்துள்ளனர், அவரது அம்மா, மனைவி உள்ளிட்டோர் வந்துள்ளனர்.  தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார்.

குற்றவாளியின் தாய்க்கு நல்ல முறையில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களே தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அனைத்து மருத்துவ சங்க பிரதிநிதிகள் உடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாசுபிரணியன் பிற்பகல் 3 மணிக்கு தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவார். கடந்த 6 மாதமாக தன்னுடைய தாய் சிகிச்சைக்காக விக்னேஷ் இந்த மருத்துவமனைக்கு வந்துள்ளார். தொடர்ந்து மருத்துவரிடம் தொடர்பில் இருந்துள்ளார்.  மருத்துவருக்கும் அவர் மீது எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.  அரை மணி நேரம் அந்த மருத்துவருடன் பேசியிருக்கிறார். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.