முதற்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை- உதயநிதி ஸ்டாலின்
முதற்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க உள்ளோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மொத்தம் 2,846 பயனாளிகளுக்கு 3 கோடியே 95 இலட்சத்து 9 ஆயிரத்து 811 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “இதுவரை 18 மாவட்டங்களில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு மற்ற மாவட்டங்களுக்கும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டத்தினர் வீரத்திற்கும் வீர விளையாட்டிற்கும் தலைசிறந்தவர்களாக உள்ளார்கள். பட்டித்தொட்டி எங்கும் விளையாட்டு வீரர்களை உருவாகும் நோக்கில் இந்த ஆண்டு முதல்வர் கோப்பை போட்டிகளில் 37 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல்வர் கோப்பை போட்டியில் கடந்த ஆண்டு 6 லட்சத்து 71 ஆயிரம் பேர் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு சுமார் ஒரு மடங்கு அதிகரித்து 11 லட்சத்து 56 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.13 துறைகளில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதிக வேலை வாய்ப்பு வழங்குவதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு 3 % வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு கோரப்பட்டு வரும் நிலையில் முதற்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க உள்ளோம்” என்றார்.