மக்கள் கையில் செங்கல்லை எடுக்கும் முன்பு எய்ம்ஸ் பணிகளை தொடங்குகள் - உதயநிதி

 
udhayanidhi stalin

மதுரை மாவட்ட மக்கள் செங்கல்லை கையில் எடுக்கும் முன்பு மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தமிழக அரசில் பணியாற்றும் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி கூறியதாவது: தமிழக அரசு சார்பாக வருடாவருடம் இந்த போட்டிகள் நடைபெறும், இந்த வருடம் இந்த போட்டியை நான் தொடங்கி வைத்து உள்ளேன். கடந்த ஒன்றரை மாதங்களாக நிறைய விளையாட்டு அரங்கங்களுக்கு சென்று விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை கேட்டுள்ளேன் அதை அனைத்தும் அதிகாரிகளிடம் பேசி முதல்வரிடம் கோரிக்கையாக வைத்துள்ளேன். கண்டிப்பாக வரும் பட்ஜெட்டில் விளையாட்டுத்துறை மானிய கோரிக்கையில் நல்ல அறிவிப்பு வரும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் குறித்து பேசிய அவர், நாடாளுமன்றம் வரையும் மதுரை செங்கல் விஷயம் பேசப்படுகிறது. மதுரை மாவட்ட மக்கள் செங்கலை எடுக்கும் முன்பு மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் பணியை தொடங்க வேண்டும் என்று தெரிவித்த அவர், ஈரோடு இடைத் தேர்தலில் கண்டிப்பாக திமுக கூட்டணி வெற்றி பெரும் என்று நம்பிக்கை உள்ளது. இவ்வாறு கூறினார்.