பொதுமக்கள் நாளை வெளியே வர வேண்டாம்- அமைச்சர் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் தற்போது வரை டிட்வா புயல் காரணமாக எந்த உயிரிழப்புகளும் இல்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
டிட்வா புயலை முன்னிட்டு, அதிக மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் இன்று (29.11.2025) மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி ஆலோசனை நடத்தினார். கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த பின் சென்னை, எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், “இலங்கை விமான நிலையத்தில் 155 தமிழர்கள் சிக்கியுள்ளனர், மழை குறைந்த பிறகு சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். விமான நிலையம் திறக்கப்பட்டவுடன் அவர்கள் அழைத்து வரப்படுவர். உள்துறை அமைச்சகத்துடன் தொடர்ச்சியாக பேசி வருகிறோம்.
டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் துரிதமாக எடுத்துள்ளார். புயல் நெருங்கும் நிலையில், தொடர்ந்து மழை பெய்வதால், பொதுமக்கள் நாளை அவசியமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். 13 நிவாரண மையங்களில் 1,058 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 5 லட்சம் பேருக்கு தலா 5 கிலோ அரிசி தயார் நிலையில் உள்ளது” என்றார்.


