தஞ்சை அருகே அதிசயக் கோயில்..! சர்க்கரை நோய்யை தீர்க்கும் தலம்..!

 
1 1

தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது திருவெண்ணியூர். இங்குள்ள மிகத் தொன்மையான அருள்மிகு கரும்பேஸ்வரர் ஆலயம்தான் சர்க்கரை நோய்க்கான பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. சூரிய - சந்திர தீர்த்தங்கள், நந்தியாவர்த்தம் விருட்சம் என அழகுற அமைந்திருக்கிறது கரும்பேஸ்வரர் ஆலயம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த கோவிலில் வெண்ணிகரும்பேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதுடன், சர்க்கரை மற்றும் ரவையை சேர்த்து கோவில் பிரகாரத்தில் எறும்புக்கு உணவாக இடுகிறார்கள். இந்த உணவை பிரகாரத்தில் உள்ள எறும்புகள் உண்பதால் சர்க்கரை நோய் பாதிப்பு குறைகிறது என்பது ஐதீகம்.


தங்களின் பிரார்த்தனை நிறைவேறியதும் இங்கு வந்து இறைவனுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து விநியோகம் செய்கின்றனர்.

மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் உள்ள இறைவனின் திருமேனி (லிங்கம்) கரும்புக்கழிகளை ஒன்றாக சேர்த்து கட்டிவைத்ததுபோல் உள்ளது. பங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடப்பது இத்தலத்தின் அதிசய நிகழ்வாகும்.

இந்த கோவிலில் நவராத்திரி 9 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகின்றது. பங்குனி உத்திரம், ஆனித்திருமஞ்சனம், திருவாதிரை, திருக்கார்த்திகை உள்ளிட்ட முக்கிய விழாக்களும் பிரமாண்டமாக நடைபெறும்.


வேறு என்ன சிறப்புகள் இந்த ஆலயத்துக்கு?
காவிரித் தென்கரையில் இது 102-வது தலம். சம்பந்தர் தனது பதிகத்தில் (இரண்டாம் திருமுறை) திருவெண்ணியூர் இறைவனை வணங்குபவர்களின் வினைகள் நீங்கும் என்றும், துன்பங்கள் அவர்களை அணுகாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திருநாவுக்கரசர் பதிகத்தில் இத்தல இறைவனை தலைதாழ்த்தி வணங்குபவர்களின் வினைகள் யாவும் நீங்கும் என்று குறிப்பிடுகிறார்.


சர்க்கரை நோய்க்கான பரிகாரம் விசேஷம் ஏன் தெரியுமா?

பெயரில் கரும்பைக் கொண்டிருக்கும் இந்த ஈசன் சர்க்கரை நோய் தீர்க்கும் இறைவனாகவும் திகழ்கிறார். சர்க்கரை நோயால் பாதிப்புறும் அன்பர்கள் இங்கு வந்து இந்த ஈசனை வழிபட்டால், அவர்களுடைய அதிகப்படியான சர்க்கரையை ஈசன் எடுத்துக்கொள்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை! பாம்பாட்டி சித்தர் கோயில்வெண்ணி இறைவன் சர்க்கரை நோய் தீர்ப்பது குறித்துப் பாடியுள்ளார்.

இங்கு பிள்ளை வரம் வேண்டியும் வழிபடலாம்...
அம்பாள் சௌந்தரநாயகி மழலைப் பேறு அருளும் மகா சக்தி. குழந்தைக்காகப் பிரார்த்திக்கும் பக்தர்கள், வளையல்களை வாங்கி வந்து அம்பாள் சந்நிதியில் கட்டிவிடுகின்றனர். பெண்கள் வளையல் சாத்தி வேண்டிக் கொண்டால் கண்டிப்பாகக் கருத்தரிப்பர் என்பது நம்பிக்கை.