பழங்குடியின மக்களுக்கு பட்டா ; நரிக்குறவர் மக்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செல்ஃபி!

 
ttn

மாமல்லபுரம்  பூஞ்சேரியில்  வசிக்கும் நரிக்குறவர்கள்,  இருளர்கள் 81 பேருக்கு வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று வழங்கினார்.

கடந்த 24ஆம் தேதி மாமல்லபுரம் ஸ்ரீ தலசயனப் பெருமாள் கோயிலில் அன்னதானம் சாப்பிட்ட சென்ற நரிக்குறவ பெண் அஸ்வினி விரட்டி அடிக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து அங்கு ஆய்வுக்காக சென்ற அமைச்சர் சேகர்பாபு நரிக்குறவ பெண் அஸ்வினுடன் ஒன்றாக அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார்.  அத்துடன் அந்தப் பெண்ணை அழைத்து அவரது குறைகளை கேட்டபோது,  எங்கள் பகுதியில் 81 நரி குறவர்கள் மற்றும் இருளர்கள் குடும்பம் வசிக்கின்றனர். எங்களுக்கு வீட்டுமனை பட்டா ,குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, சாதி, வருமான இருப்பிட சான்றிதழ்கள் எதுவுமில்லை. சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி என்ற எந்த அடிப்படை வசதியும் இல்லை. அதனால் இதையெல்லாம் செய்து தரவேண்டும் கோரிக்கை வைத்தார்.

ttn

இதை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு முதல்வர் முக ஸ்டாலினுடன்  இது குறித்து ஆலோசனை நடத்திய நிலையில், நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அதிரடி உத்தரவின் பேரில் போர்க்கால அடிப்படையில் அனைத்து அத்தியாவசிய பணிகளும் ஒரு வாரத்தில் செய்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.அந்த வகையில்  பூஞ்சேரியில்  சாலை அமைத்தல், மின்கம்பம் அமைத்தல், தெருக்கு தெரு குடிநீர் தொட்டி,  மின் விளக்குகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

ttn

இந்நிலையில் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி நரிக்குறவர் பகுதிக்கு வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட நலத்திட்டங்களை மு.க .ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது முதல் அமைச்சர் முக ஸ்டாலினுக்கு நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி பாசி மாலை அணிவித்தார். அத்துடன் இது குறித்து பேசிய அவர்,  எங்கள் மக்களுக்கு அடையாள அட்டை ,வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை செய்து ஆதரவளித்த முதல்வர் முக ஸ்டாலின் மிக்க நன்றி என்று கண்ணீர் மல்க கூறினார். தீபாவளி திருநாளில் நரிக்குறவர் இருளர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து மக்கள் பணியாற்றிய பின்பு நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் முக ஸ்டாலின் அங்கிருந்தவர்கள் உடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.