“அந்த மனசுதான் சார்... கட்சி, கொள்கையின்றி”- அதிமுக தொண்டர் கிங் காங் வீட்டு திருமண நிகழ்வில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின்!
அதிமுக தொண்டர் கிங் காங் வீட்டு திருமண நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது கட்சி, கொள்கை பேதமின்றி மனிதர்களை நேசிக்கும் மு.க.ஸ்டாலினின் குணத்தை வெளிப்படுத்தியுள்ளது.

"பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே பகைவனுக் கருள்வாய்..." என்ற பாரதியாரின் பாடலுக்கிணங்க, நல்ல மனிதராக திகழ்வது அரசியலில் அரிதான குணம். அதன்படி திமுகவுக்கும், தனக்கும் எதிரானவர்களுக்காக ஓடோடி சென்று துணை நிற்கிறார் மு.க.ஸ்டாலின். எடுத்துக்காட்டாக அதிமுக மற்றும் பாஜக ஆதரவு பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் மணிவிழாவில் பங்கேற்று வாழ்த்தினார், பாஜகவை சேர்ந்த எல்.கணேசனின் அண்ணன் மணிவிழாவில் நேரில் பங்கேற்று வாழ்த்தினார், நாம் தமிழர் கட்சி சீமானின் தந்தை காலமானபோது செல்போனில் பேசி ஆறுதல் கூறினார். அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியின் தாய் மற்றும் ஒ.பன்னீர்செல்வம் தாய் காலமான தருணங்களில் கிரீன்வேஸ் இல்லங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். சென்னை அசோக் நகரில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு மேற்கொண்டபோது சாலையில் நின்றிருந்த அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியை பார்த்ததும் காரில் இருந்து இறங்கிச் சென்று நலம் விசாரித்தார். தேமுதிக தலைவராக இருந்த விஜயகாந்த் காலமானபோது நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதிமுக எம்.எல்.ஏ-வாக இருந்த நடிகர் எஸ்.வி.சேகர் மற்றும் அவரது நாடகக் குழுவின் கலைஞர்களை நேரில் வாழ்த்தினார் இப்படி பல நிகழ்வுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
திமுகவுக்கு எதிராக பேசுபவர்கள் வீட்டு மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது தொடர்பாக திமுக ஆதரவாளர்கள் பலரும் சமுக வலைதளங்களில் கிசுகிசுத்தனர். ஆனாலும் "பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே பகைவனுக் கருள்வாய்..." என்பது போல எதிராளிகளுக்காகவும் துணைநிற்பதை - கரம்பற்றி வாஞ்சை காட்டுவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றிக்கொள்ளவில்லை. அதற்கு உதாரணம் அண்மையில் சென்னையில் நடந்த காமெடி நடிகர் கிங் காங் மகளின் திருமண நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்று வாழ்த்திய சம்பவம். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், இதை பார்க்கும் பொதுமக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். காரணம் கிங் காங் பெரிய செல்வந்தர் இல்லை, பெரிய நடிகர் இல்லை. திமுக தொண்டரோ விசுவாசியோ இல்லை. கிங் காங்கால் எந்த ஆதாயமும் கிடைக்கப்போவதில்லை. இருப்பினும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிங் காங் வீட்டு திருமண நிகழ்வில் நேரில் பங்கேற்றது இயல்பான நிகழ்வு இல்லை என்பதே..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயலை பார்த்து அதிமுக தொண்டர்கள்கூட நெகிழ்ந்து பேசுகிறார்கள். அதிமுக தொண்டரான கிங் காங் கடந்த 2021 தேர்தலில் கூட அதிமுக வேட்பாளருக்காக களத்தில் இறங்கி பிரசாரம் செய்தார். திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வாக்குசேகரித்தார். 2024 டிசம்பரில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தனது சட்டையில் பேஜ் அணித்து பங்கேற்றார் கிங் காங். இவையெல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றாக தெரிந்திருந்தும் கிங் காங் வீட்டு திருமண நிகழ்ச்சி சென்றிருக்கிறார். அதுவும் கூட திருமணம் நடந்த நாள் அன்று காலையில் திருவாரூரில் இருந்தார், மாலையில் தான் சென்னை வந்தார். சுற்றுப் பயணம் சென்ற களைப்பில் முதலமைச்சர் ஓய்வெடுத்திருக்கலாம், தனது சார்பில் பங்கேற்று கிப்ட் தருமாறு பூச்சி முருகனிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் எந்த மன சுணக்கமும் படாமல் திருமணத்திற்கு நேரில் சென்று கிங் காங்கிற்கு இன்ப அதிர்ச்சி தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நடிகர் கிங் காங் வீட்டு திருமண நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்றதும், எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டரின் நிகழ்ச்சிக்கு செல்லாமல் தவிர்த்ததும் முக்கிய விஷயத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லி உள்ளது. மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி.. இருவரில் யார் எளிய மக்களின் உணர்வோடு கலந்தவர் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டுகிறது நடிகர் கிங் காங் வீட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது..


