மூத்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

 
மூத்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி மூத்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Image


பன்னாட்டு தமிழ் உறவு மன்ற நிறுவனரும், மூத்த தமிழறிஞருமான வா.மு.சேதுராமன் அவர்கள் முதுமை காரணமாக நேற்று இரவு 7 மணி அளவில் இயற்கை அடைந்தார். 32 ஆண்டுகளாய் தமிழ் மொழியின் மேன்மை காக்க தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு விழிப்புணர்வை உருவாக்கியவர் வா.மு.சேதுராமன். அவரது உடல் சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகரில் உள்ள பெருங்கவிக்கோ தமிழ்க்கோட்டம் அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது உடலுக்கு முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக வா.மு.சேதுராமனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து சொல்லொணாப் பெருந்துயர் என்னை ஆட்கொண்டது!இன்றுகூட முரசொலியில், “ஓரணியில் தமிழ்நாட்டின் உரிமை நாட்டுவோம். தமிழர் ஒற்றுமையாய்த் திரண்டெழுந்தே வலிமை காட்டுவோம்!” எனக் கவிதை தீட்டியிருந்த அவர் இப்போது நம்மிடையே இல்லை என்பதைச் சிந்தை ஏற்க மறுக்கிறது.“தமிழ் தமிழ் தமிழ் என்று தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே தன்னை ஒப்படைத்திருக்கின்ற ஒரு பெருமகனைக் காண வேண்டுமென்றால், அது பெருங்கவிக்கோ சேதுராமனைத் தவிர வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.”  என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்ட பெருந்தகை அவர்!தமிழ்நாடு அரசின் கலைமாமணி, திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சிறப்பு சேர்த்த செந்தமிழ்ச் செம்மல்.

Image

தமிழ்ப்பணிக்கெனத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட அந்தத் தியாகச் சுடர் தனது ஒளியை நிறுத்திக் கொண்டு, வேதனை எனும் இருளில் நம் மனதைத் தவிக்கவிட்டிருக்கிறார்!ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், நூறுக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் உள்ளிட்ட படைப்புகளைத் தமிழுலகிற்கு அளித்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களது புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்!அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர் - உறவினர்கள் - தமிழ்கூறு நல்லுலகின் சான்றோர்கள் - தமிழ்த் தொண்டர்கள் என அனவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.