உலக சிக்கன நாள் : அஞ்சலக தொடர் சேமிப்பு கணக்கை தொடங்க முதல்வர் வேண்டுகோள்!!

 
stalin

தமிழக முதல்வர் ஸ்டாலின் உலக சிக்கன நாளையொட்டி அனைவரும் அஞ்சலக கணக்கு சேமிப்பை தொடங்க வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிக்கனத்தின் முக்கியத்துவத்தையும் , சேமிப்பின் அவசியத்தையும் எடுத்துரைக்கும் பொருட்டு ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் நாள் உலக சிக்கன நாளாக நாடு முழுவதும் கொண்டாடப் படுவது குறித்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

mk stalin

"அளவு அறிந்து வாழாத்தான் வாழ்க்கை உளபோல 
இல்லாகித் தோன்றாக் கெடும்"

என்னும் உலகப் பொதுமறை தந்த அய்யன் வள்ளுவரின் வாக்கிற்கிணங்க பொருளின் அளவு அறிந்து செலவு செய்யாதவன் வாழ்க்கை நன்றாக இருப்பது போல் தோன்றினாலும் ,பின்னர் இல்லாது அழிந்து விடும்.  எனவே சிக்கன நடவடிக்கைகளை கடைப்பிடித்து சிக்கனமாக வாழ்ந்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதே இந்த உலக சிக்கன நாள் வலியுறுத்துகிறது.

ttn

சிறு துளி பெரும் வெள்ளம் , சிறுக கட்டி பெருக வாழ் போன்ற பொருள் பொதிந்த இப்பொன்வரிகள் சேமிப்பின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.  மக்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை எதிர்காலத் தேவைகளைக் கருதி சேமிப்பது மிகவும் அவசியம்.  இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பாகும்.  அஞ்சலக சேமிப்பு முதுமை காலத்தில் தேவையான பாதுகாப்பு அளிக்கிறது.  எதிர்கால வாழ்க்கை பாதுகாப்பாக அமைந்திட ஒவ்வொரு குடும்பமும் சேமிப்பு பழக்கத்தினை திறம்பட வளர்த்துக்கொள்ளவேண்டும்.  அஞ்சலகத்தில் செயல்படுத்தப்படும் சிறு சேமிப்பு திட்டங்களில் செய்யப்படும் முதலீடு சிறந்த பாதுகாப்பினைத் தருகிறது. 

மேலும் சிறுக சிறுக சேமிக்கும் இத்தொகை பன்மடங்கு பெருகி அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பெரிதும் பயன்படுகிறது.  எனவே இந்த உலக சிக்கன நாளில் தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை வளப்படுத்த,  வீட்டிற்கு ஒரு அஞ்சலக சேமிப்பு கணக்கினை அருகிலுள்ள அஞ்சலகங்களில் தொடங்கி சேமித்துப் பயன் பல பெற்றிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.