நாவலர் நெடுஞ்செழியன் மார்பளவுச் சிலையை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

 
நாவலர் நெடுஞ்செழியன் சிலை திறப்பு

நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

1920ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் பிறந்த நாவலர் நெடுஞ்செழியன், தனது 24 வயதில் 1944ம் ஆண்டு திராவிட இயக்கத்தில் இணைந்தார்.  திராவிட இயக்கங்களின் 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ரா. நெடுஞ்செழியனின் பங்களிப்பு இன்றியமையாதது.  பெரியார், கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகொயோரால் பெரிதும்  புகழப்பட்டவர்.

நாவலர் நெடுஞ்செழியன் சிலை திறப்பு

 தமிழகத்தின் இடைக்கால முதலமைச்சராக 3 முறை பதவி வகித்தவர்.   அண்ணா மற்றும் கலைஞர் ஆட்சிக் காலத்தில் கல்வித்துறை அமைச்சராகவும், பின்னர் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், அவைத்தலைவர் ,  உணவுத்துறை மற்றும் நிதித்துறை அமைச்சராக பதவி வகித்திருக்கிறார். அரசியல் ஞானம் மட்டுமின்றி தமிழ் மீது தீராத காதல் கொண்ட நாவலர் நெடுஞ்செழியன், கதைகள், அரசியல் கட்டுரைகள் என 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.

நெடுஞ்செழியன் சிலை திறப்பு

கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது,  நாவலர் நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், நாட்டுடைமையாக்கப்பட்ட அவரது நூல்களுக்கு உரிமைத்தொகையாக ரூ.20 லட்சத்தை வழங்கினார்.