ஊழல்களை மறைக்க சனாதனம் குறித்த உதயநிதி பேச்சை பாஜகவினர் சர்ச்சையாக்கினர்- மு.க.ஸ்டாலின்

 
MKStalin

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ‘தைனிக் ஜாக்ரன்’ இந்தி நாளேட்டுக்கு பேட்டியளித்தார். 

mkstalin

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், அண்மையில், உங்கள் மகனான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனம் குறித்து தெரிவித்த சில கருத்துகள் வட இந்தியாவில் பெரிய சர்ச்சை உண்டாக்கியது. அதில் உங்கள் நிலைப்பாடு என்ன? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்று சொன்னதை, இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று சொன்னதாக பா.ஜ.க.வின் ஐடி விங் பொய்யாகப் பரப்பியது. அதே போல ‘ஜெனோசைட்’ என்ற சொல்லையும் உதயநிதி பயன்படுத்தவில்லை. பா.ஜ.க. ஆட்சியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த சாதனையும் இல்லை. 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஊழல்கள்தான் வெளிப்பட்டுள்ளன. இந்த ஊழல்களுக்கு பதில் சொல்ல முடியாத பா.ஜ.க அரசு - ஊழல்களைச் சுட்டிக்காட்டிய சி.ஏ.ஜி அதிகாரிகளை மாற்றி இருக்கிறது. இவற்றைத் திசைத்திருப்ப உதயநிதி பேச்சை சர்ச்சையாக்கி உள்ளார்கள்” என்றார்.

சனாதனம் பற்றி உங்கள் மகன் தெரிவித்த கருத்துகளை அவர் திரும்பப் பெறவில்லை என்ற கருத்தே பொதுவாக உள்ளது. நீங்களும் இதுபற்றி விலாவாரியாக இதுகுறித்துப் பேசாமல் இருப்பதில் ஏதேனும் அரசியல் நலன் சம்பந்தப்பட்டுள்ளதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் மதிப்பவர்கள். ஏற்றத்தாழ்வுகளை உறுதியாக எதிர்ப்பவர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த 889 நாட்களில் 1000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்திருக்கிறோம். இரண்டரை ஆண்டுகாலத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுள்ளோம். கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின்படி பணி நியமனம், பெண் அர்ச்சகர்கள் - பெண் ஓதுவார்கள் நியமனம் என இந்து மதக் கோயில்களை புனரமைத்து, பக்தர்களுக்கு வசதிகளைப் பெருக்கித் தந்திருக்கிறோம். தேரோட்டம் உள்ளிட்ட கோயில் விழாக்கள் அந்தந்த திருக்கோயில்களின் நடைமுறைப்படி நடத்தப்படுகின்றன. இதுதான் தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்களின் பார்வையாகவும் உள்ளது என்றார்.

mkstalin

தொடர்ந்து முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட உங்கள் கட்சி இந்தியா கூட்டணியில் ஓர் அங்கமாக இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் பிற கூட்டணிக் கட்சியினர் உங்கள் தலைவர்களிடம் சனாதனம் பற்றிப் பேசுவதைத் தவிர்க்குமாறு வேண்டுகிறார்கள். இருந்தும் உங்கள் கட்சியினர் அப்படி நடந்துகொள்வதாகத் தெரியவில்லையே? என்ற கேள்விக்கு தோழமைக் கட்சியினரின் கருத்துகளையும் உணர்வுகளையும் மதிக்கின்ற இயக்கம் தி.மு.கழகம். அதனால் இது பற்றி உரிய விளக்கமும் தரப்பட்டு, அவர்களின் வேண்டுகோளும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை வைத்து, இந்தியா கூட்டணிக்கு எதிராக அரசியல் செய்யலாம் என்று நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறப் போவதில்லை என பதிலளித்தார்.