"கற்பனை காட்சிக்கே 10 வருஷமா?"- பாஜகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

 
mks mks

2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன! என எய்ம்ஸ் தொடர்பான மத்திய அரசின் வீடியோவை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

mkstalin

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,  2018 ஆம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு,  2019 ஜனவரியில் எய்ம்ஸ் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. நான்கு ஆண்டுகள் ஆகியும் கட்டுமான பணிகள் ஏதும் தொடங்கப்படாமல் இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர்ந்து அழுத்தத்தால், கடந்த ஆண்டு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியது. முழு கட்டுமானத் திட்டத்தையும் பிப்ரவரி 2027 க்குள் 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தது.


இதனிடையே அண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை வந்த அமைச்சர் அமித்ஷா 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது என்று பார்க்கவில்லை. 10 ஆண்டுகளாக கட்ட அது என்ன விண்வெளி அரங்கமா? உரிய நிதி ஒதுக்கி இருந்தால் 2 ஆண்டுகளில் எய்ம்ஸ் கட்டுமானப் பணி முடிந்திருக்கும். 9 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தமிழ்நாட்டிற்கு நாங்கள் செய்த சாதனையை சொல்ல தயாராக உள்ளோம். ஆனால் 11 வருடங்களாக நீங்கள் செய்த சாதனைகளை கேட்டாலும் நீங்கள் சொல்வதில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் முக.ஸ்டாலின், “மதுரைக்கு வந்த மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள் #AIIMS என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன். அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள். 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா?இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன!” எனக் குறிப்பிட்டுள்ளார்.