“மோடியால் முடியாததை ஸ்டாலின் சாதிப்பதால் வயிற்றெரிச்சல்”- மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சியில் தான் தமிழகத்தின் வளர்ச்சி இரட்டை இலக்கத்திற்கு சாத்தியமாகியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கூறியுள்ளார்.

பல்லாவரத்தில் பட்டா வழங்கும் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சியில் தான் தமிழகத்தின் வளர்ச்சி இரட்டை இலக்கத்திற்கு சாத்தியமாகியுள்ளது. காலுக்கு கீழே நிலமும், தலைக்கு மேலே கூரையும் இன்னும் பலருக்கு கனவுதான். அதனால்தான் பட்டா வழங்குவதில் தனி கவனம் செலுத்துவேன். நிலம் என்பது நமது அதிகாரம். மக்களுக்கு பட்டா வழங்குவதில் திமுக அரசு எப்போதும் முன்னுரிமை கொடுக்கும். திமுக ஆட்சி 2021ல் பொறுப்பேற்று கடந்த 4 ஆண்டுகளில் தற்போது வரை 17.74 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம். கடந்த 5 மாதங்களில் மட்டும் 7.27 லட்சம் பேருக்கு பட்டாக்களை வழங்கியுள்ளோம். வளர்ச்சி என்பது பொருளாதார அடிப்படையில்தான். அறிவு ஜீவிபோல் அறிக்கை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி. மோடியால் முடியாததை ஸ்டாலின் சாதிக்கிறார் என்பதே அவர்களுக்கு வயிற்றெரிச்சல். இதை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சித் தலைவர், நண்பருடன் இணைந்து பேசுகிறார். திராவிட மாடல் 2.0 இன்னும் வேகமாக வளர்ச்சியடைந்து செல்லும். தமிழக மக்கள் ஆதரவுடன் எங்கள் பயணம் தொடரும் தொடரும் தொடரும்” என்றார்.


