“பயப்பட வேண்டாம், எல்லாவற்றிலும் உஷாராக இருப்பேன்” - ரஜினியின் அறிவுரையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின்

 
ஸ்டாலின்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன அத்தனையையும் நான் புரிந்துகொண்டேன், பயப்படவேண்டாம். எதிலும் நான் தவறிவிடமாட்டேன். எல்லாவற்றிலும் உஷாராக இருப்பேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Image

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எனக்கு ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. மிசாவில் கைது செய்யப்பட்ட கழக உடன்பிறப்புகளை, அவர்கள் குடும்பங்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று தலைவர் கருணாநிதி சிறைத்துறையிடம் சென்று வாதாடுகிறார். ஆனால், அவர்கள் என்னை மட்டும், உங்கள் மகனை மட்டும் நீங்கள் சந்திக்க அனுமதி தருகிறோம் என்று சொன்னார்கள். ஆனால், அந்தச் சமயத்திலும் மற்ற கழகத் தோழர்கள் அவர்கள் குடும்பங்களைச் சந்திக்க அனுமதித்த பிறகுதான் என்னுடைய மகனை நான் சந்திப்பேன் என்று சொன்னார். கடைசியாகதான் என்னை வந்து சந்தித்தார். அப்படிப்பட்ட அவரை நினைத்தாலே நம்முடைய உள்ளத்தில் ஒலிக்கின்ற குரல்…“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே…” அது ஏதோ வார்த்தை அலங்காரம் இல்லை. உயிரினும் மேலானவர்களாக உடன்பிறப்புகளை மதித்தார் தலைவர் கருணாநிதி. இந்தப் புத்தகத்தில் நான் மட்டுமில்லை, உதயநிதியும் இருக்கிறார்.

1977-ம் ஆண்டு சென்னை மத்திய சிறையில் இருந்து தலைவர் கருணாநிதி எனக்கு எழுதிய கடிதத்தில், “1953-ம் ஆண்டு நான் திருச்சி சிறையில் இருந்தபோது நீ கைக்குழந்தை. உன் அம்மா தூக்கிக் கொண்டு வந்து சிறையில் காண்பித்தார்கள். இப்போதும் நான் சிறையில் இருக்கிறேன், உனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். அந்தப் பேரனும் என்னைப் பார்க்க சிறைக்கு வருவான்” இந்த அனுபவங்கள் எல்லாம் எவ்வளவு இனிமையானவை பார்த்தாயா. இந்தக் குடும்பத்தில் மட்டுமல்ல, நமது இயக்கமாம் இந்தப் பெரிய குடும்பத்தில் எத்தனையோ உடன்பிறப்புகளுக்கு இப்படிப்பட்ட சிறை அனுபவங்கள் வாய்க்கும்” என்று எனக்கு எழுதினார். இதுபோல, பல செய்திகள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

கருணாநிதியின் வரலாற்றுடன் கழக வரலாறும் இதில் இருப்பதைத்தான் இந்த நூலின் மிக மிகச் சிறப்பானதாக நான் கருதுகிறேன். “சோதனை எனும் நெருப்பில் புடம் போட்ட சொக்கத் தங்கமாக விளங்கும் வரலாற்றுக்கு உரிமை படைத்த ஒரு பேரியக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்” என்று எழுதி இருப்பதைப் படிக்கும்போது இந்த இயக்கத்தின் தலைவன் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன்.

Image

இந்திய வரைபடத்தில் பெரிய எழுத்தில் குறிப்பிடப்படாத திருக்குவளை என்ற சிற்றூரில் பிறந்த கருணாநிதிக்கு இன்று இந்திய அரசே நாணயம் வெளியிடுகிறது என்றால், ‘அத்தகைய புகழ்மிக்க தலைவரின் உடன்பிறப்புகள்தான் நாம்’ என்பதைவிட, நமக்கு என்ன பெருமை வேண்டும். அவருடைய புகழையும், பெருமையையும் அடுத்து வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதோடு, இனம், மொழி, மாநிலம் காக்க எந்நாளும் உழைப்பதுதான் தலைவர் கருணாநிதிக்கு நாம் காட்டக்கூடிய உண்மையான நன்றி.

என்றும் இறவாத தாய்க் கலைஞர் வாழ்க! வாழ்க! என வாழ்த்தி, எ.வ. வேலுவை மனதாரப் பாராட்டி, இந்த நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பு வைத்தது போல ரஜினிகாந்த் வருகை தந்து மனந்திறந்து என்னை ஊக்கப்படுத்தக்கூடிய வகையில், என்னைவிட ஒரு வயது கூடதான், அதனால் அறிவுரையும் சொன்னார். அவர் சொன்ன அத்தனையையும் நான் புரிந்துகொண்டேன். பயப்பட வேண்டாம். எதிலும் நான் தவறிவிடமாட்டேன். எல்லாவற்றிலும் உஷாராக இருப்பேன் என்ற அந்த உறுதியை அவருக்கும் தெரிவித்து, அவருக்கு என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக அமைத்து நம்மையெல்லாம் பெருமைப்படுத்தி இருக்கக்கூடிய எ.வ.வேலுவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி, நன்றி, நன்றி என்று கூறி விடைபெறுகிறேன்! வணக்கம்!” என்றார்.