மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு- மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து அதிகரித்து கொண்டே உள்ளது. அணைக்கு நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு சுமார் 1.42 லட்சம் கன அடியாக இருந்த நிலையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் மட்டம் இன்று காலை 105 அடியாக இருந்த நிலையில், தற்போது 107 அடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறை செயலாளர் மணிவாசகன், கரூர், ஈரோடு, சேலம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் எப்போது தண்ணீர் திறப்பது, அவ்வாறு தண்ணீர் திறக்கப்பட்டால் எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.


