பாஜகவின் ஊழல் முகத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும்- மு.க.ஸ்டாலின்
தமிழகத்தின் உரிமைகளை சிதைத்து தமிழக மக்களை அழிக்கும் வேலையைதான் பாஜக செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாஅர்.
வேலூரில் நடைபெற்றுவரும் திமுகவின் முப்பெரும் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிப்பாய் கலகத்தின் நினைவு தூணை வேலூரில் நிறுவியவர் கருணாநிதி. வேலூரிக்கு பல்வேறு முக்கிய திட்டங்களை கொடுத்தவர் கருணாநிதி. நானும், அமைச்சர் துரைமுருகனும் கருணாநிதியால் வளர்த்து எடுக்கப்பட்டவர்கள். தோன்றிய காலம் முதல் அதே இளமை, உணர்வோடு இருப்பது திமுக. நான் தொண்டர்களால் திமுகவின் தலைவனாக ஆக்கப்பட்டவன். 2 கோடி கொள்கைவாதிகள் நிரம்பிய கூட்டம் திமுக. பெரியார், அண்ணா, கருணாநிதி கொள்கை வழியில் திமுக செயல்படுகிறது. இதுவரை 6 பொதுத்தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறோம்.
தமிழ்நாட்டை தலைநிறந்த மாநிலமாக மாற்றிக்கொண்டுவருகிறோம். வரிவருவாயை கபளீகரம் செய்து மாநில அரசின் செயல்பாட்டை மத்திய அரசு முடக்குகிறது. வசூலிக்கும் வரியை மத்திய அரசு முறையாக பிரித்துக் கொடுப்பது இல்லை. மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவை சிதைக்கும் முயற்சிதான் நீட். ராஜஸ்தானில் மட்டும் 20க்கும் மேற்பட்ட நீட் பயிற்சி பெற்ற மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். சில தனியார் கோச்சிங் செண்டர்களின் லாபத்திற்காகவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
ஜனநாயகத்தை காக்க வேண்டிய மிக மிக முக்கியமான காலக்கட்டத்தில் உள்ளோம். தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சி இன்று பலருக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது. தமிழகத்தின் உரிமைகளை சிதைத்து தமிழக மக்களை அழிக்கும் வேலையைதான் பாஜக செய்கிறது. 2015ல் மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை கட்டப்படவில்லை. பாஜகவின் ஊழல் முகத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும். மத்தியில் இந்தியா கூட்டணி அமைந்தால் 15 மாதத்தில் மதுரையில் எய்ம்ஸ் கட்ட முடியுமா?முடியாதா? புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் மாநிலத்தின் கல்வியை தடுக்க மத்திய அரசு பார்க்கிறது” என்றார்.