கொள்கையற்ற கூட்டத்தினர் மலிவாக அரசியல் செய்கின்றனர்- விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்
கொள்கையற்ற கூட்டத்தினர் மலிவாக அரசியல் செய்கின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.2884.93 கோடி செலவிலான 193 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 1114 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து 2.23 லட்சம் பயணிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நீட் விலக்குக்கு கடுமையான சட்ட போராட்டம் நடத்தினோம். நீட் விலக்கு தற்போது நிறைவேற்ற முடியவில்லை, அதை நாங்கள் மறுக்கவில்லை. கொள்கையற்ற கூட்டத்தினர் மலிவாக அரசியல் செய்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு சாதகமான அரசு அமைய போராடினோம், நிச்சயம் ஒரு நாள் நமது மாநிலத்துக்கான ஆட்சி அமையும். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் என்ன? வாக்குறுதிகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி பட்டியலிட முடியுமா? திமுக அரசின் திட்டங்களுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. ஈபிஎஸ் கையெழுத்திட்ட முதலீடுகள் செயல்பாட்டிற்கு வரவில்லை.
தமிழ்நாட்டைவிட்டு தொழில்நிறுவனங்கள் ஓடிப்போக காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளை எடப்பாடி பட்டியலிட முடியுமா? தெற்கு ஆசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்துவேன். தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்லுகின்றனர். பொய் சொன்னாலும், பொருத்தமாக சொல்லுங்கள். கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமல்ல சொல்லாத வாக்குறுதிகளான காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறோம்.” என்றார்.


