“கவலை படாதீங்க... அரசு வேலை கிடைக்க ஏற்பாடு”- தாயை இழந்த பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு முதல்வர் ஆறுதல்
தென்காசியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த மல்லிகா என்பவர் மகளை போனில் தொடர்பு கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு ஆறுதல் கூறினார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் நேற்று முன்தினம் 2 தனியார் பேருந்து மோதி விபத்துகள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். அதில் புளியங்குடி பகுதியை சேர்ந்த மல்லிகாவும் ஒருவர். மல்லிகா கணவனை இழந்து தனது மூன்று பிள்ளைகளை பீடி சுற்றி படிக்க வைத்ததாகவும், மகள் கிருத்திகாவுக்கு இரண்டு கண்ணும் தெரியாத நிலையில் சிறுவயதிலிருந்து பீடி சுற்றியும், மகளிர் சுயஉதவி குழு மூலம் லோன் பெற்று படிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

மல்லிகா சாலை விபத்தில் இறந்ததை தொடர்ந்து அந்த குடும்பம் செயல்இழந்து காணப்பட்ட நிலையில், கண் தெரியாத கீர்த்திகா என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இது பற்றி தெரிய வந்தவுடன் அவர் கீர்த்திகாவை ஃபோனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் உங்களை வந்து சந்திப்பார். அரசு வேலை கிடைக்க வழிவகை செய்து தருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக கீர்த்திகா செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.


