காலிலேயே விழுந்த பிறகு முகத்தை மூடி என்ன பயன்?- ஈபிஎஸ்-ஐ விமர்சித்த ஸ்டாலின்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்து விட்டு திரும்பும் போது அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடியப்படி வந்ததை குறிப்பிட்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், காலிலேயே விழுந்த பிறகு முகத்தை மூடி என்ன பயன் என விமர்சித்தார்.

கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் என்று டெல்லிக்கு கேட்பது அனைவரும் சொல்ல வேண்டும். அண்ணாயிசமாக இருந்த அதிமுக கொள்கையை அடிமையிசமாக மாற்றி அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி சரணந்துவிட்டார். வயிற்றெரிச்சலால் அவர்கள் பேசுவது ஆட்டுக்காக ஓநாய் கண்ணீர் வடிப்பது போன்றது. ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யாத எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டை பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டார். திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாமல் அதிமுகவின் தலைமை பொறுப்பில் பழனிசாமி உள்ளார். அமித்ஷாவின் காலிலேயே விழுந்தபிறகு முகத்தை மறைக்க கைக்குட்டை ஏன் எதற்கு எல்லோரும் கேட்கிறார்கள். முழுவதும் நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று எல்லோரும் கேட்கிறார்கள். பாஜக அரசின் மக்கள் விரோத செயல்கள் அனைத்தையும் நேருக்கு நேர் எதிர்கிறோம். ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக போராடி, போராடி தமிழ்நாட்டை வைத்துள்ளோம்.
திமுக ஆட்சியால் தலைநிமர்ந்த தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுணிய விடமாட்டோம். அனைத்தையும் கொடுத்த தமிழ்நாட்டை காக்கும் பொறுப்பும் கடமையும் திமுகவுக்குத்தான் உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எனும் மாண்பை மறந்து எடப்பாடி தொடர்ந்து ஒருமையில் பேசிவருகிறார். ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யாமல் தற்போது எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டுகிறார். வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் நமது வாக்குரிமையை பறிக்கிறார்கள். அன்று முதல் இன்று வரை அடக்குமுறைக்கு தமிழ்நாட்டில் நோ எண்ட்ரிதான். அடக்குமுறைக்கும், ஆதிக்கத்துக்கும், இந்தி திணிப்புக்கும் தமிழ்நாட்டில் நோ எண்ட்ரிதான்” என்றார்.


