பாஜக மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வரக்கூடாது! இதுதான் நம்முடைய இலக்கு- மு.க.ஸ்டாலின்
இந்தியா கூட்டணி அமைத்தார்கள், இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்... இதுதான் வரலாறாக இருக்க வேண்டும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி – சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ”வெல்லும் சனநாயகம்” மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?" என்பதற்கு இலக்கணமாகத் தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் அருமைச் சகோதரர் திருமாவளவன் அவர்களின் படை வீரர்கள் ஜனநாயகம் காக்க கூடியிருக்கிறீர்கள்! அருமைச் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களை அவர் சட்டக்கல்லூரி மாணவராக - மாணவர் தி.மு.க.வில் பணியாற்றிய காலத்தில் இருந்தே தெரியும்! அப்போதே கல்லூரி மேடைகளிலும் - கழக மாணவரணி மேடைகளிலும் அவரின் பேச்சு, கொள்கை கர்ஜனையாக இருக்கும்! நாள்தோறும் கொள்கை உரம் வலுப்பெறும் இளம் காளையாகத்தான் இன்றைக்கும் ஜனநாயகம் காக்க இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். அன்றைக்குக் கழகத்துக்குள்ளே முழங்கினார்! இன்றைக்கு கழகக் கூட்டணிக்குள் இருந்து முழங்கி வருகிறார்!
சகோதரர் திருமா அவர்கள், எப்போதும் - எந்த சூழ்நிலையிலும் எங்களுக்கு உள்ளே இருப்பவர்! மன்னிக்கவும் நமக்குள்ளே இருப்பவர்! தலைவர் கலைஞருக்கு மட்டுமல்ல எனக்கும் தோளோடு தோளாக துணை நிற்பவர் சகோதரர் திருமா அவர்கள்! நாங்கள் எப்போதும் தமிழினத்தின் வலிமைக்கு உரம் சேர்க்கும் அடிப்படையில்தான் இணைந்து இயங்குகிறோம். நமக்கிடையே இருப்பது தேர்தல் உறவு அல்ல; அரசியல் உறவு அல்ல; கொள்கை உறவு! தந்தை பெரியாரையும் - புரட்சியாளர் அம்பேத்கரையும் யாராலாவது பிரிக்க முடியுமா? அதுபோலதான், திராவிட முன்னேற்றக் கழகமும் - விடுதலைச் சிறுத்தைகளும்! புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த மண்ணில் மரத்வாடா பல்கலைக் கழகத்துக்கு அம்பேத்கர் பெயர் வைக்கவும் தலைவர் கலைஞர்தான் காரணம்! தந்தை பெரியார் மண்ணில் சென்னை சட்டக் கல்லூரிக்கு டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்று பெயர் வைத்ததும், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கியதும் தமிழினத் தலைவர் கலைஞர்தான்! புரட்சியாளர் அம்பேத்கரை உயர்த்தி பிடிக்கும் இயக்கம்தான், திராவிட முன்னேற்றக் கழகம்!
புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுகின்ற - பட்டியலின மக்களின் நலனைப் பாதுகாக்கிற அரசுதான், நமது திராவிட மாடல் அரசு! சிலவற்றை மட்டும் தலைப்புச் செய்திகளாக பட்டியலிட விரும்புகிறேன்! அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை, சமத்துவ நாளாக அறிவித்தோம்! சகோதரர் திருமாவளவன் அவர்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று, அம்பேத்கர் நினைவு மண்டபத்தில் அண்ணலின் சிலையை அமைத்து, நானே திறந்து வைத்தேன். அண்ணலின் படைப்புகளைச் செம்பதிப்புகளாக விரைவில் வெளியிட இருக்கிறோம்! ஆதிதிராவிடர் - பழங்குடியினர் ஆணையத்தை புதுப்பித்து உயிரூட்டினோம். நடத்தப்படாமல் இருந்த விழிப்புணர்வு கூட்டங்களை ஆறு மாதத்துக்கு ஒருமுறை நடத்தினோம். திராவிடப் பேரொளி அயோத்திதாசரின் சிலையை சென்னையில் திறந்து வைத்தோம். அண்ணல் அம்பேத்கர் பெயரால் தொழில் முனைவோர் நிதியும், அயோத்திதாசர் பெயரால் வீடுகட்டும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தந்தை பெரியாரும் - பேரறிஞர் அண்ணாவும் - தமிழினத் தலைவர் கலைஞரும் உருவாக்கிய திராவிட - தமிழின உணர்வின் வெளிப்பாடுகளாகத்தான் இதையெல்லாம் நிறைவேற்றிக் காட்டி வருகிறோம். சமூகநீதி - சமத்துவச் சிந்தனை கொண்ட ஆட்சியை இந்தியா முழுமைக்கும் அமைக்க வேண்டும் என்பதற்காக சகோதரர் தொல். திருமாவளவன் இந்த ‘வெல்லும் ஜனநாயகம்‘ மாநாட்டை கூட்டியிருக்கிறார். "வெல்லும் ஜனநாயகம்" என்று சொன்னால் மட்டும் போதாது! நாம் எல்லோரும் இணைந்து செயல்பட்டாக வேண்டும்! இதுக்கான கட்டளையை பிறப்பிக்கத்தான் இந்த மாநாட்டை கூட்டி, சர்வாதிகார பா.ஜ.க. அரசை தூக்கி எறிவோம்! ஜனநாயக அரசை நிறுவுவோம்! என்று சபதம் ஏற்று மிக முக்கியமான 33 தீர்மானங்களை இந்த மாநாட்டில் நிறைவேற்றியிருக்கிறார் சகோதரர் திருமாவளவன் அவர்கள்! இந்த சபதமும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் நிறைவேற்றப்படும் என்பது உறுதி!
இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்குத்தான் இருக்கிறது. ஒன்றியத்தில் கூட்டாட்சி அரசையும், மாநிலங்களில் சுயாட்சி அரசையும் உருவாக்க வேண்டும். அதனால்தான், குடியரசு நாளான இன்றைக்கு இந்த மாநாட்டை கூட்டியிருக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் மக்களாட்சி மாண்புகள் காக்கப்பட வேண்டும் என்றால், ஜனநாயகம் வென்றாக வேண்டும்! அப்போதுதான், கூட்டாட்சி மலரும்! கூட்டாட்சியை சுட்டிக்காட்ட நாம் பயன்படுத்தும் ‘ஒன்றிய அரசு‘ என்ற சொல்லை ‘Union of States’ என்று பயன்படுத்தியவரே புரட்சியாளர் அம்பேத்கர்தான்!
அரசியலமைப்புச் சட்டம் கொடுத்த அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்லியிருக்கிறார்... "யூனியன் அரசும், மாநில அரசும் தனித்தனி அதிகாரம் பெற்றவை! ஒன்று மற்றொன்றுடன் அடிபணியவில்லை; ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது" என்று சொன்னார். அதைத்தான் நாமும் சொல்கிறோம்! "மாகாணங்கள் தெள்ளத் தெளிவான சகலவித தேசிய இன அம்சங்களையும் கொண்டிருக்கின்றன. எனவே, அவற்றின் தேசியப் பண்பு முழுநிறைவாய் வளர்ந்து மலர சுதந்திர வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்" என்றும் புரட்சியாளர் அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். இத்தகைய எண்ணம் கொண்ட ஒரு ஒன்றிய அரசை நாம் உருவாக்க வேண்டும்! அதற்கு தொடக்கமாக பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும்! தமிழ்நாட்டில் பா.ஜ.க. என்பது, பூஜ்யம்! அதனால் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் மட்டும் பா.ஜ.க.வை வீழ்த்தினால் போதாது! அகில இந்தியா முழுவதும் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும்! அதற்கான அடித்தளம்தான் இந்தியா கூட்டணி! ஒன்றிய அளவில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதை இலக்காக கொண்ட எல்லா கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறது!
பா.ஜ.க. என்று சொல்வதால், இது தனிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிரான கூட்டணி என்று சுருக்கிவிட முடியாது! இந்தியாவின், ஜனநாயகத்தை - மக்களாட்சியை - மதச்சார்பின்மையை - பன்முகத்தன்மையை - ஒடுக்கப்பட்ட மக்களை - ஏழை எளிய மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் பா.ஜ.க. மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வரக்கூடாது! இதுதான் நம்முடைய இலக்கு பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பே இருக்காது. ஜனநாயக அமைப்பு முறையே இருக்காது. நாடாளுமன்ற நடைமுறையே இருக்காது. ஏன்... மாநிலங்களே இருக்காது! இதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்! மாநிலங்களை கார்ப்பரேஷன்களாக ஆக்கிவிடுவார்கள்! கண்ணுக்கு முன்பே ஜம்மு காஷ்மீர் சிதைக்கப்பட்டதை பார்த்தோம். ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து - யூனியன் பிரதேசங்களாக ஆக்கினார்கள். தேர்தல் கிடையாது! அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வீட்டுச் சிறை! இதுதான் பா.ஜ.க. பாணி சர்வாதிகாரம்! அந்த நிலைமைதான் எல்லா மாநிலங்களுக்கும் ஏற்படும்.
கேள்விகள் இல்லாத நாடாளுமன்றம்! 140 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு அவமானம் இல்லையா? உலக நாடுகள் என்ன நினைக்கும்? சிரிக்க மாட்டார்களா? "உலகின் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்கிறீர்களே, நான்கில் ஒரு பங்கு உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வதுதான் உங்கள் ஜனநாயகமா என்று கேட்க மாட்டார்களா? உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்திய ஆட்சியாக பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றினாலும் மாற்றிவிடுவார்கள்! நமக்கு முன்னால் இருக்கும் நெருக்கடி, நாம் உணர்ந்திருப்பதை விட மிக மோசமானது! மிக மிக மோசமானது! அகில இந்திய அரசியல் தலைவர்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு நான் அதிகமாக விளக்க வேண்டிய தேவை இல்லை! மாநிலத்துக்கு மாநிலம் அரசியல் நிலைமை மாறுபடும்! ஆனால் நடக்கப்போவது நாடாளுமன்றத் தேர்தல்! ஒன்றியத்தில் யார் ஆட்சி நடக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்து எல்லோரும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒற்றை லட்சியம்தான் எல்லோருக்கும் இருக்க வேண்டும்! பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் எந்தக் காரணம் கொண்டும் சிதறக்கூடாது! பகைவர்களோடு சேர்த்து துரோகிகளையும் மக்களிடையே அடையாளம் காட்ட வேண்டும்!
வரலாறு என்ன சொல்ல வேண்டும் தெரியுமா? "இந்தியா கூட்டணி அமைத்தார்கள்! இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்!" இதுதான் வரலாறாக இருக்க வேண்டும்! ஒரே ஒரு எடுத்துக்காட்டை சொல்ல விரும்புகிறேன். சண்டிகர் மாநகர மேயர் தேர்தல் நடக்க இருந்தது. பா.ஜ.க.வுக்கு 14 உறுப்பினர்கள்! ஆம் ஆத்மி கட்சிக்கு 13 உறுப்பினர்கள்! காங்கிரஸ் கட்சிக்கு 7 உறுப்பினர்கள்! ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி! மேயர் பதவியை இந்தியா கூட்டணி கைப்பற்றும் நிலைமை உருவானது! இந்தியா கூட்டணியின் முதல் வெற்றியாக இது அமையப் போகிறது என்று வடமாநில ஊடகங்களில் எழுதினார்கள். உடனே என்ன செய்தார்கள் தெரியுமா? தேர்தலையே ரத்து செய்துவிட்டார்கள்! ஒரு மேயர் தேர்தலையே கேன்சல் செய்கிறார்கள் என்றால், பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை இந்தியா கூட்டணி தலைவர்கள் உணர்ந்தாக வேண்டும். இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும்! நாம் ஒற்றுமையாக இருந்தால் நிச்சயமாக பா.ஜ.க. தோற்கடிக்கப்படும்! ஜனநாயகம் வெல்லும்! அதனைக் காலம் சொல்லும்! தொல். திருமாவளவனும் வெல்வார்! அதையும் காலம் சொல்லும்!” எனக் கூறினார்.