’உள்ளாட்சியிலும் நம்ம ஆட்சி தொடரட்டும்’ - நாளை முதல் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலியில் பரப்புரை..

 
ஸ்டாலின்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை முதல் (பிப் 6) காணொளி வாயிலாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும்  19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை  பிப் 22 ஆம் தேதி நடைபெறுகிறது.   இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு,  தேர்தல்  பணிகளில் மும்முரமாக   ஈடுபட்டு வருகின்றனர். 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜனவரி 28-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி,  நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

தேர்தல்

50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் பெறப்பட்டதாக  கூறப்படும் நிலையில், வேட்புமனுக்கள் மீதான  பரிசீலினை  இன்று நடைபெற்று வருகிறது.  வேட்புமனுக்களை திரும்பப்பெற பிப் 7 ஆம் தேதி கடைசி நாள் என்பதால்,  அன்று தான் இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும்.  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம்  சூடு பிடித்துள்ள நிலையில், கட்சியினர் வாக்கு சேகரிப்பில் தீவிரம் கட்டி வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக தேர்தல் பரப்புரையின் போது அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில தேர்தல்  ஆணையம் விதித்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையம்

அதன்படி பிப் 11 வரை  பேரணியாகவோ, சைக்கிள் பேரணியிலோ சென்று வாக்கு சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேருக்கு மேல் வீடு வீடாகச் சென்று பரப்புரையில் ஈடுபடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதுபோன்ற கட்டுப்பாடுகள் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொளி மூலம் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.   கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி  திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொளி வாயிலாக நாளை ( 6-ஆம் தேதி)  முதல் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

ஸ்டாலின் பரப்புரை