நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்- மு.க.ஸ்டாலின்

 
mkstalin mkstalin

தகுதிக்கான அளவுகோல் எனப் பொய்வேடம் தரித்த நீட் தேர்வு சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஊடுருவிப் பாதிக்கும் ஒரு மோசடி என்பது திரும்ப திரும்ப நிரூபணமாகிவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK Stalin demands removal of 50 per cent ceiling on reservation - India  Today

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீட் தேர்வு தொடர்பாக நடைபெற்று வரும் சர்ச்சைகள், சமத்துவத்துக்கு எதிரான அதன் தன்மையை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்டு வந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்துக்காக மேலும் பல வாய்ப்புகளை நாம் வழங்க வேண்டும். மாறாக, அத்தகைய மாணவர்களுக்கான வாய்ப்புகளுக்கு 'நீட்' தடை போடுகிறது. தேசிய தேர்வு முகமை மேல் தவறில்லை என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் பேசியிருந்தாலும், நடந்து வரும் நிகழ்வுகள் அதற்கு மாறான சித்திரத்தையே அளிக்கின்றன. 
    
தேர்வுக் கண்காணிப்பாளர்கள் பணம் பெற்றுக்கொண்டு OMR விடைத்தாள்களில் திருத்தம் மேற்கொண்டது, அதற்கு ஆதாரமாகப் பல கோடி ரூபாய்க்கான காசோலைகள், தொகை குறிப்பிடப்படாத காசோலைகள் கைப்பற்றப்பட்டது உள்ளிட்ட புகார்கள் மீது குஜராத் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்துள்ளனர். இந்தச் சதிச்செயலில் பள்ளி முதல்வர், இயற்பியல் ஆசிரியர், பல நீட் பயிற்சி மையங்களும் கூட்டு சேர்ந்து ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு அமைப்புரீதியாகவே மாற்றம் தேவைப்படுவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நீட் ஒழிப்புப் போராளி மாணவி அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவர்கள் இத்தேர்வினால் பரிதாபத்துக்குரிய முறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளதை நாம் பார்த்துவிட்டோம். இனியும் பொறுக்கலாகாது.



    
தகுதிக்கான அளவுகோல் எனப் பொய்வேடம் தரித்த நீட் தேர்வு சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஊடுருவிப் பாதிக்கும் ஒரு மோசடி என்பது திரும்ப திரும்ப நிரூபணமாகிவிட்டது. 'மாணவர்களுக்கு எதிரான - சமூகநீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான' இந்த நீட் முறையை ஆதரிப்பதை ஒன்றிய அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.