மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் குரங்கு அம்மை சிகிச்சைக்கு பிரத்யேக வார்டு..

 
மதுரை அரசு மருத்துவமனை


மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் குரங்கு அம்மை நோய்க்கான பிரத்யேக சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக , மருத்துவமனை  முதல்வர் ரத்னவேல் தெரிவித்திருக்கிறார்.  

ஆப்ரிக்க நாடுகளில் பரவக்கூடிய நோய்தான் இந்த குரங்கு அம்மை.. தற்போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்த குரங்கு அம்மை வைரஸ் பரவியிருக்கிறது. கொரோனா பாதிப்பிலிருந்தே மக்கள் மீளாத நிலையில், இந்த குரங்கு அம்மை பெரும் அச்சுறுத்தலாக உறுவெடுத்து வருகிறது.  இந்த வைரஸ் பாதிப்பு இன்னும் இந்தியாவில் பதிவாகவில்லை என கூறப்பட்டு வந்தாலும், மத்திய மற்றும் மாநில  சுகாதாரத்துறையினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் தமிழகத்தில் குரங்கு அம்மை  பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே  தெரிவித்திருந்தார்.

குரங்கு அம்மை - Monkey Pox

அதன் அடிப்படையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்களுக்கு சுற்றறிக்கை  ஒன்றையும் அனுப்பியிருந்தார். அதில் குரங்கு நம்மை தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார்.  இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குரங்கு அம்மை சிகிச்சைக்காக  20 படுக்கைகளுடன் கூடிய  பிரத்யேக  வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.  அனைத்து படுக்கைகளிலும் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டுள்ளதோடு,  24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் மருத்துவர்கள்  மற்றும் செவிலியர்கள் குழு  தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,  

சிறப்பு வார்டு

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முதல் கட்டமாக சிகிச்சை தரும் வகையில் மருந்து-மாத்திரைகளும்,  
குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்களின்  சளி மற்றும்  ரத்த மாதிரிகளை  எடுத்து புனே ஆய்வகத்திற்கு அனுப்பவும் தாயார் நிலையில் உள்ளதாக மதுரை அரசு  மருத்துவமனை  டீன் ரத்னவேல் தெரிவித்து உள்ளார்.