இம்மாதம் 30-ம் தேதிக்குள் பருவமழை முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்..!

 
1
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர்ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் ரூ.38.50 கோடியில் வீராங்கல் ஓடை, ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் – அரும்பாக்கம் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், வேளச்சேரி ஏரி, கூவம், அடையாறு போன்றவற்றில் மிதக்கும் தாவரங்கள் மற்றும் பொருட்களை இயந்திரங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்யும் பணியை செப்.30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

அதுபோல, ரூ.590 கோடியில் மேற்கொள்ளப்படும் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளில் முக்கியப் பகுதிகளான தணிகாச்சலம் கால்வாய், மணப்பாக்கம் கால்வாய், மாதவரம் ரெட்டேரி மற்றும் கெருகம்பாக்கம் கால்வாய் போன்றவற்றில் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் வரும் 30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

மேலும், தேவையான மணல் மூட்டைகள், காலி கோணிகள், சவுக்கு கம்புகள் ஆகியவற்றை பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக ஆங்காங்கே போதுமான அளவில் இருப்பு வைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.