2026 தேர்தலில் கூடுதல் சீட்.. மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்..!!
2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெற வேண்டும் என மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31 ஆவது பொதுக்குழு, இன்று 22.06.2025 காலை 10 மணி அளவில் ஈரோடு, பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மஹாலில், அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இப்பொதுக்குழுவில் மொத்தம் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மதிமுக , திமுக கூட்டணியில் தொடரும், 2026 சட்டம்னற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை பெறுவது, இஸ்ரேல்- ஈரான் போரில் இந்தியா மௌனம் காப்பதற்கு கண்டனம், கீழடி அகழாய்வை அங்கீகரிக்காத மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதன்படி முதல் தீர்மானத்தில், “தமிழ்நாட்டு அரசியல் அரங்கத்தில் 32 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் உறுதியோடு தனது இலட்சியப் பயணத்தைத் தொடர்கிறது. தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காக சமரசம் இன்றி போராடி வரும் மறுமலர்ச்சி திமுக தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் அரணாகத் திகழ்கிறது. திராவிட இயக்கத்திற்கு எதிரான பகை சக்திகள் தமிழ்நாட்டைக் கைப்பற்ற முனைந்து வரும் சூழலில், தேர்தல் கூட்டணி தொடர்பாக 2017 ஆம் ஆண்டிலிருந்து எடுத்த முடிவை எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மறுமலர்ச்சி திமுக தொடர்ந்து கடைபிடிப்பது என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மூன்றாது தீர்மானத்தில், “மறுமலர்ச்சி திமுக உதயமானதிலிருந்து 1996, 2001, 2006, 2016, 2021 ஆகிய ஐந்து சட்டமன்ற தேர்தல்களிலும், 1996, 1998, 1999, 2004, 2009, 2014, 2019, 2024 ஆகிய எட்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் களம் கண்டிருக்கிறது. 1997 ஆம் ஆண்டு முதல் 2010 வரையில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக திகழ்ந்தது. எனவே 2026 சட்டப்பேரவை தேர்தலில் கழகம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக கூடுதல் தொகுதிகளைக் கூட்டணியில் பெற்று போட்டியிட வேண்டும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


